பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

342
IPL KXI v KKR 2017

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் 11ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிரடியை காட்டிய வோரா 19 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 9 ஓட்டங்களிலும் தொடக்க வீரர் ஹஷிம் அம்லா 25 ஓட்டங்களிலும் அணித்தலைவர் க்லென் மெக்ஸ்வெல் 14 பந்துகளில் 25 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

18ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கிரிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 171 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கௌதம் கம்பீர் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

பவர்ப்ளேயில் மட்டும் கொல்கத்தா அணி 72 ஓட்டங்களை குவித்தது. இதுவே பவர்ப்ளேவில் கொல்கத்தாவின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 5.4ஆவது ஓவரில் வருன் ஆரோன் வீசிய பந்தை தூக்கி அடித்த சுனில் நரேன் அக்ஷர் படேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கலாக 37 ஓட்டங்களை குவித்தார். பின்னர் கௌதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்த ரொபின் உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகம் உயர்ந்தது. 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்த ரொபின் உத்தப்பா அக்சர் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மணீஷ் பாண்டே 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். கௌதம் கம்பீர் 49 பந்துகளில் 11 பவுண்டரிகளை விளாசி 72 ஓட்டங்களை பெற்று  கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 170/9 (20) –  மனன் வோரா 28(19), டேவிட் மில்லர் 28(19), க்லென் மெக்ஸ்வெல் 25(14), உமேஷ் யாதவ் 4/33

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 171/2 (16.3) – கௌதம் கம்பிர் 72*(49), சுனில் நரேன் 37(18), ரொபின் உத்தப்பா 26(16)