இம்முறை டி20 உலகக் கிண்ணத்துக்கு தான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி நிச்சயம் சாதிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர்.
இந்த நிலையில், இம்முறை T20 உலக கிண்ணத் தொடருக்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற சமய நிகழ்வுகளில் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வனிந்து ஹஸரங்க ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். தனக்கு கிடைத்த அணி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
அணியின் தலைவராக தேர்வுக் குழுவிடம் நான் கோரியிருந்த அணி வீரர்கள் தான் எனக்கு கிடைத்துள்ளனர். தேர்வாளர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தலைவர் என்ற விதத்தில் பாரிய நம்பிக்கையுடன் நான் அமெரிக்கா பயணிக்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.
எமது பந்து வீச்சாளர்கள் சிலர், தற்போது நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் கலந்துக்கொண்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டே T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு வருகைத் தருகின்றார்கள். அதேபோன்று எமது துடுப்பாட்ட வீரர்களும் இறுதியாக நடைபெற்ற 3 தொடர்களிலும் சிறந்த முறையில் பிரகாசித்துள்ளனர். எனவே இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நிச்சயம் எம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என அவர் தெரிவித்தார்.
- T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
- U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு
இதனிடையே, T20 உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும்S என வனிந்துவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
T20 உலகக் கிண்ணத் தொடரை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் நோக்கில் தான் 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்வதற்கு தீர்மானித்தோம். போட்டியை நடத்தும் நாடான அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் குறித்து சரியான புரிதல் இல்லாததால், முன்கூட்டியே அங்கு புறப்பட்டுச் செல்வது மிகவும் அவசியம்.
அதன்படி, போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, எமது வீரர்களுக்கு சில நாட்கள் அங்கு பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளித்து, ஆடுகளங்களை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதே எமது அணி நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், இம்முறை T20 உலகக் கிண்ணத்திலும் ஐபிஎல் தொடரில் பயன்படுத்துகின்ற ஆடுகளங்களைப் போல விளையாட கிடைத்தால் அணியின் வியூகம் எவ்வாறு இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு வனிந்து பதிலளிக்கையில்,
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் பதிவு செய்யப்பட்டாலும், T20 உலகக் கிண்ணத்தில் அத்தகைய நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டியில் புதிதாக இம்பாக்ட் பிளேயர் விதிமுறை பயன்படுத்தப்படுவதால், மேலதிகமாக ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு அணிக்காக விளையாடுவார். இதனால் தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்;;டங்கள் பதிவு செய்யப்படுகின்றது. எனவே ஐபிஎல் தொடரைக் காட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், அதன் விதிமுறைகளும் முற்றிலும் மாறுப்பட்டது என வனிந்து ஹஸரங்க சுட்டிக்காட்டினார்.
2024 ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஜூன் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் D குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை, எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற உள்ள தமது முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<