மார்கண்டே, டிருப்பாதியின் பிரகாசிப்புகளுடன் ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி

IPL 2023

209

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற இரண்டாவது IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

அதுமாத்திரமின்றி தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த பருவகாலத்தின் முதல் வெற்றியையும் பதிவுசெய்தது.

>> ஐ.பி.எல். நடப்புச் சம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ரிங்கு சிங் 

ஹைதராபாத் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, அணித்தலைவர் சிகர் தவானைத் தவிர்த்து வேறு எந்த துடுப்பாட்ட வீரர்களும் தேவையான ஓட்டக்குவிப்பை பெற்றுத்தரவில்லை.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற சிகர் தவான் தனியாளாக 66 பந்துகளில் 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், ஒரு ஓட்டத்தால் சதத்தை துரதிஷ்டவசமாக தவறவிட்டார். இவரை தவிர்த்து செம் கரன் 22 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர்.

எனவே தவானின் தனிநபர் பிரகாசிப்பின் உதவியுடன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மார்கோ யான்சன் மற்றும் உம்ரான் மலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹெரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, முதல் 2 விக்கெட்டுகளும் 45 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

எனினும் அடுத்து களமிறங்கிய ராஹுல் டிரிபாத்தி மற்றும் அணித்தலைவர் எய்டன் மர்க்ரம் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

குறிப்பாக டிரிபாத்தி வேகமான ஆரம்பத்துடன் ஓட்டங்களை குவிக்க, இவருக்கு சிறப்பாக பங்களிப்பு வழங்கி மர்க்ரம் துடுப்பெடுத்தாடினார். டிருபாத்தி ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 74 ஓட்டங்களையும், மர்க்ரம் 21 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற 17.1 ஓவர்கள் நிறைவில் ஹைதராபாத் அணி வெற்றியை பதிவுசெய்தது. பந்துவீச்சில் அர்ஷ்டீப் சிங் மற்றும் ராஹுல் சஹார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளதுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<