இலகுவான வெற்றிகளுடன் IPL தொடரை ஆரம்பித்த பெங்களூர், ராஜஸ்தான்!

IPL 2023

222
IPL 2023

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இலகுவான வெற்றிகளை பதிவுசெய்தன.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டதுடன், மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது.

>> சுபர் ஓவரில் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஜொஸ் பட்லர், சஞ்சு சம்சன், யசஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் அரைச்சதங்கள் மற்றும் யுஸ்வேந்திர சஹாலின் அபார பந்துவீச்சின் உதவியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.

சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்கு பட்லர் வேகமான ஆரம்பத்துடன் 22 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யசஷ்வி ஜெய்ஷ்வால் 54 (37 பந்துகள்) ஓட்டங்களையும், சம்சன் 32 பந்துகளுக்கு 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நடராஜன் மற்றும் பஷல்ஹக் பரூகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிசேக் சர்மா மற்றும் ராஹுல் திரிபாத்தி ஆகியோர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து ஏமாற்றினர். தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பங்களை பெற்றாலும் பாரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டவேகமும் மிகக்குறைவாக காணப்பட்ட நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவுசெய்தது.

துடுப்பாட்டத்தில் அப்துல் சமத் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மயங்க் அகர்வால் 27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சை பொருத்தவரை ராஜஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ்

பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கியது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன.

ரோஹித் சர்மாவில் தொடங்கி, இசான் கிஷன், கிரிஸ் கிரீன், சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி, தங்களுடைய 7 விக்கெட்டுகளை 123 ஓட்டங்களுக்கு இழந்தது.

எனினும் கடந்த ஆண்டு அறிமுகமாகி கவனத்தை ஈர்த்திருந்த துடுப்பாட்ட வீரர் திலக் வர்மா தனியாளாக ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார். இவருடன் புதுமுக வீரர் நெஹால் வெதேரா 13 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை பெற, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகுளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் கரன் சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

துடுப்பாட்டத்தில் போராடி ஓரளவு சவாலான வெற்றியிலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த போதும், பெங்களூர் அணியின் தலைவர் பெப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் மும்பை அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

இவர்கள் இருவரும் அரைச்சதங்களை விளாசியமை மாத்திரமின்றி, முதல் விக்கெட்டுக்காக 148 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் பிளெசிஸ் 43 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்ற ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்திலிருந்த விராட் கோஹ்லி 49 பந்துகளுக்கு 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து 16.2 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சில் அர்ஷாட் கான் மற்றும் கெமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை முதல் போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் முறையே மூன்றாவது மற்றும் முதல் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<