றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணி, இந்த வெற்றியால் மீண்டது. அதேபோல, இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 2ஆவது முறையாக தோற்கடித்தது.
IPL தொடரின் 36ஆவது லீக் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புதன்கிழமை (26) மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கடந்தப் போட்டியை போலவே அதிரடியாக ஆடிய ஜேசன் ரோய் 29 பந்துகளில் 4 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிதிஷ் ராணா 48 ஓட்டங்களையும், வெங்கடேஷ் அய்யர் 31 ஓட்டங்களையும், நாராயண் ஜெகதீசன் 27 ஓட்டங்களையும் எடுத்து அணிக்கு கைகொடுத்தனர்.
பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்க மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
- ஆப்கான் வீரர்களின் சுழலில் சிக்கி வீழ்ந்த மும்பை அணி
- பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸை வென்றது டெல்லி
- இறுதிவரை போராடி பெங்களூர் அணியிடம் வீழ்ந்த ராஜஸ்தான்!
இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய பெங்களூர் அணிக்கு பாப் டூ பிளெசிஸ் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த சபாஸ் அஹமட் 2 ஓட்டங்களுடனும், கிளென் மெக்ஸ்வெல் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லியும், மஹிபால் லோமரோரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இதில் லோமரோர் 34 ஓட்டங்களில் வெளியேறினார்.
அரைச் சதம் அடித்த விராட் கோஹ்லி 37 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வனிந்து ஹசரங்க 5 ஓட்டங்களை எடுத்து வெளியேற தினேஷ் கார்த்திக் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் 18 பந்துகளில் 48 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பெங்களூர் அணி 26 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனால், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா, அண்ட்ரூ ரஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி நடப்பு IPL தொடரில் 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி, இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தள்ளி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<