RCB அணியிலிருந்து வெளியேறும் 3ஆவது வீரர்

Indian Premier League 2023

310

இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக IPL தொடரிலிருந்து விலகியுள்ளார்.  

IPL கிரிக்கெட் தொடரின் 16ஆவது அத்தியாயம் கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பல அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளியேறுவது பெரும்பாலான அணிகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இம்முறை IPL தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள பாப் டூ பிளெசிஸ் தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் சிலர் IPL தொடரில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருவது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மினி ஏலத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான வில் ஜெக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.

அதேபோல, IPL தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த அந்த அணியின் இளம் வீரர் ரஜத் படிதார் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக IPL தொடரில் இருந்து முழுமையாக விலகியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து மூன்றாவது வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி IPL தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் மிகச் சிறப்பாக முறையில் பந்துவீசியிருந்த அவர், களத்தடுப்பில் ஈடுப்பட்ட போது பந்தை தடுக்கச் சென்று வலது தோள்பட்டையில் காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் நாடு திரும்பி உள்ளார் என்று அந்த அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இவருக்கான மாற்றீடு வீரர் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க நியூசிலாந்துடனான T20i தொடர் நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 10ஆம் திகதி அவ்வணியில் இணையவுள்ளார். அதேபோல, காயத்தில் இருந்து ழுமையாக குணமடைந்திருக்கும் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் ஏப்ரல் 14ஆம் திகதி அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அணிக்கு வரும் பட்சத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<