ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (19) நடைபெற்ற IPL போட்டியில் லக்னோ சுபர் ஜய்ண்ட்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளளது.
ஜெய்ப்பூரின் சவாய் மன்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற IPL தொடரின் 26ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் லக்னோ சுபர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இதன்படி, லக்னோ சுபர் ஜய்ண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
லக்னோ அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டத்தை அமைத்து முதல் விக்கெட்டுக்கு 82 ஓட்டங்களைக் குவித்தனர். இதில் கேஎல் ராகுல் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த ஆயுஷ் பதோனி ஒரு ஓட்டத்துடனும், தீபக் ஹூடா 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபுறம் பொறுப்பாக ஆடிய கைல் மேயர்ஸ் அரைச் சதமடித்து 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் மத்திய வரிசையில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரான் 29 ஓட்டங்களையும் எடுக்க, இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- கெமரூன் கிரீனின் அதிரடியில் மும்பைக்கு ஹெட்ரிக் வெற்றி
- IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா
- மாலிங்கவிற்கு நன்றி தெரிவித்த குட்டி மாலிங்க
இதையடுத்து 155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாகி விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர்.
எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கை 87 ஆக இருந்த போது ஜெய்ஸ்வால் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து 41 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த பட்லரை, ஸ்டோய்னிஸ் வெளியேற்ற, அடுத்து இம்ப்பெக்ட் வீரராக வந்த தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி வெற்றிக்காக போராடினார்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அவேஷ் கான் பந்துவீசினார். ஓவரின் 3ஆவது பந்தில் படிக்கல் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஜுரேல் ஆட்டமிழக்க, கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்து 10 ஓட்டங்களால் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
லக்னோ அணியின் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலமாக லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. அதே போன்று ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
மறுபுறத்தில் இவ்விரு அணிகளுக்குமிடையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக ராஜஸ்தானுக்கு எதிராக தனது முதல் வெற்றியை லக்னோ அணி பதிவு செய்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி – 154/7 (20) – கைல் மேயர்ஸ் 51, கேஎல் ராகுல் 39, ரவிச்சந்திரன் அஸ்வின் 2/23
ராஜஸ்தான் றோயல்ஸ் அணி – 144/6 (20) – யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 44, ஜோஸ் பட்லர் 40, அவேஷ் கான் 3ஃ25, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2ஃ28
முடிவு – லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<