சுழல் வீரர்களுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்த குஜராத் டைடன்ஸ்

197
Credit : BCCI

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 48ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர்களை 09 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

>> https://www.thepapare.com/kl-rahul-ruled-out-of-the-ipl-with-leg-injury-tamil/

குஜராத் டைடன்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (05) ஜெய்ப்பூரில் ஆரம்பமாகியது.   போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர்கள் முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தமக்காகப் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி குஜராத் அணியின் சுழல்பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதோடு 17.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 118 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் சஞ்சு சாம்ஷன் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்வீரர்களான ரஷீட் கான் 03 விக்கெட்டுக்களையும், நூர் அஹ்மட் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த 119 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் அணி 13.5 ஓவர்களில் வெற்றி இலக்கினை ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 119 ஓட்டங்களுடன் அடைந்தது.

குஜராத் டைடன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டம் சார்பில் வ்ரித்திமான் சஹா 34 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் உடன் 41 ஓட்டங்கள் எடுக்க, ஹார்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெறும் 15 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

>> IPL தொடரிலிருந்து விலகினார் கேஎல் ராகுல்

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் மாத்திரம் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்த போதும் அதனால் பிரயோசனம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை குஜராத் டைடன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்திருந்த ரஷீட் கான் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

ராஜஸ்தான் றோயல்ஸ் – 118 (17.5) சஞ்சு சாம்ஷன் 30(20), ரஷீட் கான் 14/3(4), நூர் அஹ்மட் 25/2(3)

குஜராத் டைடன்ஸ் – 119/1 (13.5) வ்ரித்திமான் சஹா 41(34)*, ஹார்திக் பாண்டியா 39(15)*, யுஸ்வேந்திர சாஹல் 22/1(3.5)

முடிவு – குஜராத் டைடன்ஸ் 09 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<