சிவம் துபேவின் அரைச் சதம் வீண்; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை

Indian Premier League 2023

221

IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதிரடியாக ஆடி அரைச் சதம் அடித்த ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ஓட்டங்களைக் குவித்தார்.

பின்வரிசையில் வந்து அதிரடி காண்பித்த துருவ் ஜுரேல் 15 பந்துகளில் 34 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் எடுக்க ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களைக் குவித்தது. IPL வரலாற்றில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்து ராஜஸ்தான் அணி சாதனை படைத்தது.

சென்னை சுபர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுபர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவான் கொன்வே 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 13 பந்துகளில் 15 ஓட்டங்களை எடுத்து பெவிலியன் திரும்ப, மாற்று வீரராக வந்த அம்பத்தி ராயுடு முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எனினும் சிவம் துபே சிக்சர்களாக விளாசி ஓட்டங்களை சேர்க்க மொயின் அலி 12 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

எவ்வாறாயினும், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவம் துபே 29 பந்துகளில் தனது அரைச் சதத்தைப் பதிவுசெய்தார்.

ஆனால் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் யாதவ் வீசிய அந்த ஓவரில் சென்னை அணியால் வெறும் 4 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் நிறைவில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியதுடன், மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அத்துடன் சென்னை அணி கடைசியாக 4 தடவைகள் ராஜஸ்தானை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி 3ஆவது இடத்திற்கு சரிந்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<