இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை (05) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குவஹாத்தியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்ப வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அவரும் அணித்தலைவர் ஷிகர் தவானும் இணைந்து முதல் விக்கெட்டிற்காக 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற வலுச்சேர்த்தனர்.
தொடர்ந்து வந்த பானுக ராஜபக்ஷ களமிறங்கினாலும், ஷிகர் தவான் அடித்த பந்து அவரது கையில் பலமாக தாக்கியதன் காரணமாக அவர் மைதனானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து ஜித்தேஷ் சர்மா தவானுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைக் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அணித்தலைவர் ஷிகர் தவான் 86 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
- மொயீன் அலியின் அபார பந்துவீச்சுடன் சென்னைக்கு முதல் வெற்றி
- சாய் சுதர்சன் அதிரடியில் குஜராத் அணிக்கு 2ஆவது வெற்றி
- குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணையும் தசுன் ஷானக!
பின்னர், 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களுடனும், ரவிச்சந்திரன் அஷ்வின் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து வந்த ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். ரியான் பராக் 20 ஓட்டங்களை எடுத்து வெளியேற, பின்னர் இணைந்த ஹெட்மேயர் – துருவ் ஜுரல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளியப்படுத்தியிருந்தார்கள்.
இருவரும் 7 ஆவது விக்கெட்டிற்காக 27 பந்துகளில் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய சாம் கரண், முதல் பந்தில் ஒரு ஓட்டத்தையும், 2ஆவது பந்தில் 2 ஓட்டங்களையும் கொடுத்த நிலையில், 3ஆவது பந்தில் மேலும் 2 ஓட்டங்களுக்கு ஆசைப்பட்டு ஹெட்மயர் ரன்அவுட் ஆனார்.
தொடர்ந்து 4ஆவது பந்தில் ஒரு ஓட்டம் கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தை சந்தித்த ஹோல்டர் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி பந்தில் ஜுரல் பௌண்டரியொன்றை அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால் 192 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தரப்பில், நெதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தமது இரண்டாவது போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பதுடன், இரண்டாவது போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<