சூர்யகுமார், நெஹால் வதேரா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

232

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 54ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் அதிரடியாக வீழ்த்தி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

>> கால்பந்தில் ஆரம்பித்து ஜப்பான் வரை கிரிக்கெட் சுற்றுலா செய்த தீசன்

மேலும், இந்த வெற்றியுடன் இம்முறை IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தம்முடைய ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இது ஆறாவது தோல்வியாக மாறியிருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான IPL போட்டி செவ்வாய்க்கிழமை (09) மும்பை நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பெப் டு பிளேசிஸ் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை எடுத்தனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கிளன் மெக்ஸ்வெல் 41 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் டு பிளேசிஸ் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.

இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரெண்ட்ரோப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை வெறும் 16.4 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களுடன் அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டம் சார்பில் மைதானத்தினை அதிரடியினால் அலங்கரித்த சூர்யகுமார் யாதவ் வெறும் 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் நெஹால் வதேரா 34 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் பெற்றார். இவர்களோடு இஷான் கிஷன் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் பெற்று மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு மற்றுமொரு பங்களிப்பினை வழங்கினார்.

>> மதீஷ பத்திரன ஏன் ரொனால்டோ போன்று கொண்டாடுகின்றார்?

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் சாய்த்த போதும் அது வீணானது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த சூர்யகுமார் யாதவ் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 199/6 (20) கிளன் மெக்ஸ்வெல் 68(33), டு பிளேசிஸ் 65(41), ஜேசன் பெஹ்ன்ட்ரோப் 36/3(4)

மும்பை இந்தியன்ஸ் – 200/4 (16.4) சூர்யகுமார் யாதவ் 83(35), நெஹால் வதேரா 52(34)*, வனிந்து ஹஸரங்க 53/2(4), விஜய்குமார் வைஷாக் 37/2(4)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 06 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<