டிம் டேவிட்டின் அதிரடியோடு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

273

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 42ஆவது லீக் போட்டியில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ் 

IPL புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் காணப்பட்ட ராஜாஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (30) மும்பையில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜாஸ்தான் ரோயல்ஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.  அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களில் ஒருவராக களமிறங்கிய யஷாஷ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய கன்னி IPL சதத்தோடு 62 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில்    அர்ஷாத் கான் 3 விக்கெட்டுக்களையும், பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 213 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கீரின் மற்றும்  சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தோடும் டிம் டேவிட்டின் இறுதி  நேர அதிரடியோடும் போட்டியின் வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி இலக்கினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைச்சதம் பெற்று 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் கேமரூன் கீரின் 26 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 44 ஓட்டங்கள் பெற, களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த டிம் டேவிட் வெறும் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகளோடு 45 ஓட்டங்கள் பெற்றார்.

>> மார்ஷ், சோல்ட் அதிரடி வீண்; சன்ரைசர்ஸிடம் போராடித் தோற்றது டெல்லி 

அத்துடன் டிம் டேவிட் போட்டியின் இறுதி ஓவருக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளுக்கும் மூன்று சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி அதிரடியான முறையில் போட்டியினை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சென்னை ராஜாஸ்தான் ரோயல்ஸ் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த யஷாஷ்வி ஜெய்ஸ்வால் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

ராஜாஸ்தான் ரோயல்ஸ் – 212/7 (20) யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 124(62), அர்சாத் கான் 39/3(4), பியூஸ் சாவ்லா 34/2(4)

மும்பை இந்தியன்ஸ் – 214/4 (19.3) சூர்யகுமார் யாதவ் 55(29), டிம் டேவிட் 45(14)*, கேமரூன் கிரீன் 44(26), ரவிச்சந்திரன் அஸ்வின் 27/2(4)

 முடிவு – மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>  கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<