மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழங்கியதுடன், உபாதைக்குள்ளாகியிருந்த ஜொப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தார்.
>>மொஹித் சர்மாவின் அபார பந்துவீச்சால் குஜராத் அணிக்கு திரில் வெற்றி
துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சராசரியான ஆரம்பத்தை பிரப்சிம்ரன் சிங் (26 ஓட்டங்கள்), அதர்வா டைட் (29 ஓட்டங்கள்) ஆகியோர் பெற்றுக்கொடுத்தாலும் முதல் 10 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் கிங்ஸ் அணி தடுமாறியது.
தடுமாற்றத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றை அணித்தலைவர் செம் கரன் மற்றும் ஹர்பிரீட் சிங் ஆகியோர் பெற்றுக்கொடுக்க தொடங்கினர். அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய செம் கரன் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஹர்பிரீட் சிங் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர்களின் இன்னிங்ஸ்களை தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா வெறும் 7 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்களை குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் பியூஸ் சௌலா மற்றும் கெமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை பொருத்தவரை எதிர்பார்க்கப்பட்ட இசான் கிஷன் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் கெமரூன் கிரீன் ஆகியோர் பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை கொடுக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் 76 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் ரோஹித் சர்மா 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரோஹித்தின் ஆட்டமிழப்பை தொடர்ந்து கெமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிரீன் அரைச்சதம் கடக்க, சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைச்சதம் கடந்து தன்னுடைய வேகமான அரைச்சதத்தை IPL தொடரில் பதிவுசெய்தார்.
>>WATCH – சதீரவின் வருகையால் பறிபோகுமா டிக்வெல்லவின் வாய்ப்பு?
கெமரூன் கிரீன் 43 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த போதும் சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அணியை வெற்றியிலக்குக்கு அருகில் அழைத்துச்சென்றனர். ஒருகட்டத்தில் 17 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
தொடர்ந்து டிம் டேவிட் 13 பந்துகளில் 25 ஓட்டங்களை விளாசியதுடன், கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் என்ற நிலைக்கு அணியை அழைத்திருந்தார். எனினும், அர்ஷ்டீப் சிங்கின் அற்புதமான கடைசி ஓவரின் காரணமாக 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. அர்ஷ்டீப் சிங் தன்னுடைய 4 ஓவரில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
எனவே தங்களுடைய 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக்கொண்டதுடன், தங்களுடைய 3வது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<