இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 தொடரின் 23ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியானது குஜராத் டைடன்ஸ் அணியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையிலான IPL லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) அஹமதாபாதில் ஆரம்பமாகியிருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரில் மூன்றாவது வெற்றி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் குஜராத் டைடன்ஸ் அணியை துடுப்பாட பணித்திருந்தது. அதன்படி குஜராத் டைடன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.
குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 46 ஓட்டங்கள் பெற்றார். அவரோடு சுப்மன் கில் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 178 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் ஆரம்பவீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆட்டமிழக்க 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் புதிய துடுப்பாட்டவீரர்களாக களம் வந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் மற்றும் சிம்ரோன் ஹெட்மேயர் ஆகியோர் அதிரடி அரைச்சதங்கள் விளாச ராஜஸ்தான் றோயல்ஸ் போட்டியின் வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களுடன் அடைந்தது.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காத ஹெட்மேயர் 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை குவித்தார்.
திமுத் – மெண்டிஸ் இணைப்பாட்டத்ததுடன் முதல் நாளில் வலுப்பெற்ற இலங்கை
இதேவேளை, குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்டுக்களையும் ரஷீட் கான் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டிய போதும் அது வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சிம்ரோன் ஹெட்மேயர் தட்டிச் சென்றார்.
போட்டியின் சுருக்கம்
குஜராத் டைடன்ஸ் – 177/7 (20) டேவிட் மில்லர் 46(30), சுப்மன் கில் 45(34), சந்தீப் சர்மா 25/2(4)
ராஜஸ்தான் றோயல்ஸ் – 179/7 (19.2) சஞ்சு சாம்சன் 60(32), சிம்ரோன் ஹெட்மேயர் 56(26)*, மொஹமட் சமி 25/3(4), ரஷீட் கான் 46/2(4)
முடிவு – ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி
இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<