சுப்மான் கில்லின் அதிரடி சதத்தோடு இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ்

235
Gujarat Titans vs Mumbai Indians

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இரண்டாவது குவாலிபயைர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ஓட்டங்களால் தொடரின் நடப்புச் சம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியிருக்கின்றது.

>> IPL இறுதிப்போட்டியில் ஆசியக்கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு

இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைடன்ஸ் அணி தெரிவாகுவதுடன், மும்பை இந்தியன்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் மோதலில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வீரர்களை வீழ்த்தி, முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் இடம் தோல்வியடைந்த குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது குவாலிபையர் போட்டி நேற்று (26) அஹமதாபாதில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை குஜராத் டைடன்ஸ் வீரர்களுக்காக வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில், சுப்மான் கில்லின் அதிரடி ஆட்டத்தோடு 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்கள் எடுத்தனர்.

குஜராத் அணியின் துடுப்பாட்டத்தில் சுப்மான் கில் இந்த IPL பருவத்தில் பெற்ற மூன்றாவது சதத்தோடு 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக வெறும் 60 பந்துகளில் 129 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

>> அபார பந்துவீச்சோடு குவாலிபையர் போட்டிக்கு தெரிவான மும்பை

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 234 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டி வாய்ப்பையும் இழந்தது.

மும்பை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுக்க, திலக் வர்மா 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி மற்றும் ரஷீட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மான் கில் தெரிவானர்.

போட்டியின் சுருக்கம்

குஜராத் டைடன்ஸ் – 233/3 (20) சுப்மான் கில் 129(60), சாய் சுதர்ஷன் 43(31)

மும்பை இந்தியன்ஸ் – 171 (18.2) சூர்யகுமார் யாதவ் 61(38), திலக் வர்மா 43(14), ரஷீட் கான் 33/2(4)

முடிவு – குஜராத் டைடன்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<