IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று இரவு (29) நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் அடைந்த தொடர் தோல்விகளுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முற்றுப்புள்ளி வைத்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது,
அதன்படி, சன்ரைசர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 5 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 10 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் 8 ஓட்டங்களுடனும், ஹெரி ப்ரூக் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
எனினும், பொறுப்புடன் விளையாடிய அபிஷேக் சர்மா 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசன் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுக்க, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைக் குவித்தது.
டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- விஜய் சங்கர் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்
- பஞ்சாப்பை வீழ்த்தி புது வரலாறு படைத்த லன்னோ அணி
- சிவம் துபேவின் அரைச் சதம் வீண்; ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை
இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டக்அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து வந்த பிலிப் சோல்ட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி ஓட்டங்களைக் குவித்ததுடன், 2ஆவது விக்கெட்டிற்கு சத இணைப்பாட்டத்தை மேற்கொண்டு வலுச்சேர்த்தனர்.
இதில் பிலிப் சோல்ட் 35 பந்துகளில் 59 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 63 ஓட்டங்களையும் எடுத்து வெளியேறினார். இருப்பினும் டெல்லி அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சன்ரைசர்ஸ் அணியின் தரப்பில் அதிகபட்சமாக மயங்க் மார்க்கண்டே 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹூசைன், நடராஜன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஓரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி கெபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, இம்முறை IPL தொடரில் 6ஆவது தோல்வியைப் பதிவு செய்த டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்க, சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 4ஆவது வெற்றியைப் பதிவு செய்து மும்பையை 9ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளி 8ஆவது இடத்திற்கு முன்னேறியது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<