த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ்

923
MATHEESA PATHIRANA

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 41ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> மார்ஷ், சோல்ட் அதிரடி வீண்; சன்ரைசர்ஸிடம் போராடித் தோற்றது டெல்லி

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி இன்று (30) சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற MS. டோனி தலைமையிலான சென்னை சுபர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுபர் கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களில் ஒருவராக களமிறங்கிய டெவோன் கொன்வேய் வெறும் 52 பந்துகளில் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் ருத்திராஜ் கய்க்வாட் 31 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 04 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், சேம் கர்ரன், ராகுல் சஹார் மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 201 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த பிரப்சிம்ரன் சிங் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தார். அவரோடு மத்திய வரிசையில் ஆடிய லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடியும் அவ்வணிக்கு கைகொடுக்க பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் முன்னேறியது.

தொடர்ந்த ஆட்டத்தில் இறுதி 02 ஓவர்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரினை வீசிய துஷார் தேஷ்பாண்டே குறித்த ஓவரில் 13 ஓட்டங்களை வாரி இறைத்திருந்தார். இதன் காரணமாக போட்டியின் இறுதி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 09 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

போட்டியின் இறுதி ஓவரினை வீசியிருந்த மதீஷ பத்திரன பஞ்சாப்பிற்கு அழுத்தம் வழங்கி இறுதிப் பந்துவரை ஆட்டத்தினை கொண்டு சென்றதோடு, போட்டியின் இறுதிப் பந்திற்கு 03 ஓட்டங்கள் தேவைப்பட்டு அந்த ஓட்டங்களை மதீஷ பத்திரனவின் ஓவரில் சிக்கந்தர் ரஷா பெற்றுக் கொள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களுடன் அடைந்தது. அத்துடன் சென்னை மைதானத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிராக விரட்டப்பட்ட கூடுதல் வெற்றி இலக்காகவும் மாறியது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி இலக்கினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் லியாம் லிவிங்ஸ்டோன் 24 பந்துகளுக்கு 04 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியோடு 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இவர்களோடு இறுதிவரை நின்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த சிக்கந்தர் ரஷா 7 பந்துகளில் ஒரு பௌண்டரி அடங்கலாக 13 ஓட்டங்கள் எடுத்தார்.

>> LPL தொடருக்கு பதிவுசெய்துள்ள சர்வதேசத்தின் முன்னணி வீரர்கள்

இதேவேளை சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 03 விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, மதீஷ பத்திரன ஒரு விக்கெட் கைப்பற்றிய போதும் அது வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகன் விருதினை சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த டெவோன் கொன்வெய் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

சென்னை சுபர் கிங்ஸ் – 200/4 (20) டேவோன் கொன்வெய் 97(52)*, ராகுல் சாஹர் 35/1(4)

பஞ்சாப் கிங்ஸ் – 201/6 (20) பிரப்சிம்ரன் சிங் 42(24), லியாம் லிவிங்ஸ்டோன் 40(24), துஷார் தேஷ்பாண்டே 49/3(4)

முடிவு – பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<