இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 06 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (14) சென்னையில் ஆரம்பமாகியது.
>> இலகு வெற்றியுடன் பிளே ஒப் வாய்ப்பை அதிகரித்த றோயல் செலஞ்சர்ஸ்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றது. இதன்படி சென்னை அணியினர் முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்தனர்.
சென்னை சுபர் கிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சிவம் டூபே 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனீல் நரைன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 145 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஆரம்பத்தில் தடுமாறிய போதும் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரானாவின் இணைப்பாட்டத்தோடு, போட்டியின் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களுடன் அடைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த நிதிஷ் ரானா 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுக்க, ரிங்கு சிங் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளோடு 54 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இரு வீரர்களும் கொல்கத்தா அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 99 ஓட்டங்களை பகிர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் தீபக் சாஹர் 03 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் தெரிவாகியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
சென்னை சுபர் கிங்ஸ் – 144/6 (20) சிவம் டூபே 48(34)*, சுனீல் நரைன் 15/2(4), வருண் சக்கரவர்த்தி 36/2(4)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 147/4 (18.3) ரிங்கு சிங் 54(43), நிதிஷ் ரானா 57(44)*, தீபக் சாஹர் 27/3(4)
முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 06 விக்கெட்டுக்களால் வெற்றி
இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணை யத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<