சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் (21) சென்னை சுபர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதற்கு தீர்மானித்ததுடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.
>> மைதானத்தில் வைத்து கண்ணீர் சிந்திய லசித் மாலிங்க!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பம் முதல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், சிறந்த ஓட்டக்கட்டுப்பாட்டுடன் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.
ஓட்டங்களை கட்டுப்படுத்தியது மாத்திரமின்றி ரவீந்திர ஜடேஜா தன்னுடைய 4 ஓவர்கள் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து மேலும் அழுத்தத்தை அதிகரித்தார். இவருடன் மஹீஷ் தீக்ஷன சுழல் பந்துவீச்சில் பிரகாசித்து ஒரு விக்கெட்டினை கைப்பற்ற, மதீஷ பதிரண 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தி கடைசி ஓவர்களில் அபாரம் காண்பித்தார்.
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு டெவோன் கொன்வே மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்காக 87 ஓட்டங்கள் பகிரப்பட்டதுடன் துரதிஷ்டவசமாக 35 ஓட்டங்களை பெற்றிருந்த கைக்வாட் பந்துவீச்சாளர் முனையில் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவரையடுத்து அஜின்கியா ரஹானே மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஆட்டமிழந்த போதும், டெவோன் கொன்வே சிறப்பாக ஆடி அரைச்சதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார்.
டெவோன் கொன்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 18.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து சென்னை சுபர் கிங்ஸ் அணி வெற்றியை உறுதிசெய்தது.
இந்தப்போட்டியில் வெற்றியினை பதிவுசெய்த சென்னை சுபர் கிங்ஸ் அணி 4வது வெற்றியுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<