இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்காக உருவெடுத்துள்ளது. 2008ஆம் ஆண்டு IPL ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து திறமையான பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களாக உருவாக்கிய பெருமை IPL தொடருக்கு உண்டு.
இந்த நிலையில், IPL தொடரின் 15ஆவது அத்தியாயம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 26ஆம் திகதி ஆரம்பமாகியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
மேலும் நடப்பு பருவத்தில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 74 போட்டிகளைக் கொண்ட பிரம்மாண்ட தொடராக இந்த ஆண்டு IPL தொடர் நடைபெறவுள்ளது.
>>IPL மெகா ஏலத்தில் கோடிகளை அள்ளிய வீரர்கள்
இந்த ஆண்டு IPL தொடரிலும் நிறைய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இம்முறை IPL தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள இளம் வீரர் அல்லது வயது குறைந்த வீரர் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மஹீஷ் தீக்ஷன (சென்னை சுபர் கிங்ஸ்)
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சர்வதேச களத்திற்கு அறிமுகமானார்.
அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய அவர், குறித்த போட்டியில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற T20 தொடரிலும் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் மஹீஷ் தீக்ஷன வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திலும் திறமைகளை வெளிப்படுத்திய 21 வயதான மஹீஷ் தீக்ஷனவை கடந்த மாதம் இடம்பெற்ற IPL மெகா ஏலத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 70 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியது.
எனவே, இம்முறை IPL தொடரில் களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரராக மஹீஷ் தீக்ஷன உள்ளார்.
அப்துல் சமத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக விளையாடும் இளம் சகலதுறை வீரர் தான் அப்துல் சமத். கடந்த ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வலைப் பந்துவீச்சாளராக அவர் இடம்பிடித்திருந்தாலும், தனக்கு கிடைத்த ஓரிரெண்டு வாய்ப்புகளில் சகலதுறையிலும் பிரகாசித்து அனைவரையும் கவர்ந்தார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து IPL இல் இடம்பிடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் சமத் ஆவார். எனவே, IPL தொடரில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் சகலதுறை வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற 20 வயது வீரரான அப்துல் சமத், இம்முறை IPL ஏலத்திற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். .
>>சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக ரவிந்தீர ஜடேஜா
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடி வருகின்ற 20 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
List A போட்டிகளில் இளம் வயதில் இரட்டைச் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட இவர், 2020ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார்.
எனவே, இம்முறை IPL மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக தக்கவைக்கப்பட்ட யஷஸ்வி, தற்போதும் கூட அந்த அணியில் உள்ள இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அசோக் சர்மா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
இந்திய கிரிக்கெட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய, வளர்ந்து வரும் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும், அந்நாட்டு தேர்வாளர்களைக் கவர்ந்த ஒரு வீரராகவும் விளங்குகின்ற அசோக் சர்மா, இந்த ஆண்டு IPL மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
பந்தை மிகவும் கட்டுப்பாட்டுடனும், ஸ்விங் செய்கின்ற திறன் படைத்த 19 வயதான அசோக் சர்மா, இம்முறை IPL தொடரில் கொல்கத்தா அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயங்க் யாதவ் (லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ்)
டெல்லியைச் சேர்ந்த 19 வயது வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ், இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.
வெறுமனே 2 List A போட்டிகளில் அவர் விளையாடியிருந்தாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு திறமைகளை வெளிப்படுதியதன் காரணமாக IPL வரத்தைப் பெற்றுக்கொண்டார்.
யாதவ் பந்தை ஸ்விங் செய்வதிலும், நேர்த்தியான வேகத்தில் பந்து வீசுவதிலும் வல்லவர். எனவே, இம்முறை IPL தொடரில் முத்திரை பதிக்க மயங்க் யாதவ் தயாராக உள்ளார்.
>>எனது அனுபவம் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் – மாலிங்க
யாஷ் துல் (டெல்லி கெபிடல்ஸ்)
மேற்கிந்திய தீவுகளில் அண்மையில் நிறைவடைந்த ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் தலைவராக செயல்பட்டு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த வீரர் தான் யாஷ் துல்.
குறித்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 281 ஓட்டங்களை எடுத்த அவர், இறுதியாக நடைபெற்ற ரஞ்சி கிண்ணத் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமாகி இரண்டு சதங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.
19 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான யாஷ் துல்லை, இம்முறை IPL மெகா ஏலத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணி வாங்கியது. எனவே, போட்டித்தன்மை கொண்ட T20 லீக்கில் இந்த திறமையான இளைஞரைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ராஜ் பாவா (பஞ்சாப் கிங்ஸ்)
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடிய வீரர்களில் ராஜ் பாவாவும் ஒருவர். இறுதிப்போட்டியில் 54 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்ற ராஜ் பாவா, இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் அவரது செயல்பாடுகள் பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் IPL உரிமையாளர்களால் கவனிக்கப்பட்டது. இதன் பிரதிபலனாக, இம்முறை IPL மெகா ஏலத்தில் 19 வயது சகலதுறை வீரரான ராஜ் பாவாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
>>IPL வர்ணனையாளர் குழுவில் இடம்பிடித்த ரஸல் ஆர்னல்ட்
அனீஷ்வர் கௌதம் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர்)
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் அனீஷ்வர் கௌதமும் இடம்பிடித்திருந்தார். 19 வயதுடைய சகலதுறை வீரரான இவர், எதிர்காலத்தில் T20 போட்டிகளில் முன்னணி வீரர்களில் ஒருவராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, இம்முறை IPL மெகா ஏலத்தில் அனீஷ்வரை அடிப்படை விலையான 20 இலட்சத்துக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி வாங்கியது. இந்திய 19 வயதின்கீழ் அணியின் நட்சத்திரமான அனீஷ்வரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த களமாக இம்முறை IPL தொடர் அமையவுள்ளது.
டெவால்ட் ப்ரீவிஸ் (மும்பை இந்தியன்ஸ்)
இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர் தான் டெவால்ட் ப்ரீவிஸ்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 18 வயதான சகலதுறை வீரரான இவர் குறித்த தொடரில் 506 ஓட்டங்களை எடுத்து, இளையோர் உலகக் கிண்ண அத்தியாயம் ஒன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார். அதேபோல, பந்துவீச்சிலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
‘பேபி டிவில்லியர்ஸ்’ என அழைக்கப்படுகின்ற இவர், ஏபி டிவில்லியர்ஸைப் போல மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் ஓட்டங்களைக் குவிக்கின்ற திறன் கொண்டவராக உள்ளார். இதன்காரணமாக இம்முறை IPL மெகா ஏலத்தில் டெவால்ட் ப்ரீவிஸை மும்பை இந்தியன்ஸ் அணி 3 கோடிக்கு வாங்கியது.
எனவே, இந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ள டெவால்ட் ப்ரீவிஸ், அந்த அணிக்காக அசத்த காத்திருக்கிறார்.
>>RCB தலைவராக பாப் டு பிளெசிஸ்; விளக்கமளிக்கும் RCB முகாமைத்துவம்
நூர் அஹமட் (குஜராத் டைட்டன்ஸ்)
ஆப்கானிஸ்தானின் மற்றுமொரு வளர்ந்து வரும் இளம் சுழல் பந்துவீச்சாளர் தான் நூர் அஹ்மட், உலகம் முழுவதும் நடைபெறுகின்ற T20 லீக் போட்டிகளில் தனது சுழல் பந்துவீச்சின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், கடந்த ஆண்டு IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயல்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற IPL மெகா ஏலத்தில் நூர் அஹ்மட் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்,
ஏற்கனவே சில சர்வதேச லீக்குகளில் மிகவும் இளம் வயதில் விளையாடியதால் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். எனவே, தனக்கென்ற தனித்துவமான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டுள்ள 17 வயதுடைய நூர் அஹ்மட், இம்முறை IPL தொடரில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<