சன்ரைசர்ஸ் உதவிப் பயிற்சியாளர் சைமன் கடிச் இராஜினாமா

Indian Premier League 2022

331
Simon Katich
@BCCI

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளரான சைமன் கடிச், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் தேர்வான வீரர்களை வைத்து, அனைத்து அணிகளும் வியூகங்கள் மற்றும் இறுதி பதினொருவர் அணியை தேர்வு செய்து வருகின்றன.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக நடப்பு சீசனுக்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளராக சைமன் கடிச் நியமிக்கப்பட்டார். அத்துடன், கடந்த வாரம் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பயிற்சியாளர் டொம் மூடி, பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் ஆகியோருடன் இணைந்து சைமன் கடிச்சும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகுவதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் சைமன் கடிச் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐ.பி.எல் ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சைமன் கடிச் பதவி விலகினார் என்று கூறப்பட்டாலும் இரண்டரை மாதங்கள் கொரோனா தடுப்பு வளையத்தில் (Bio bubble) இருப்பது சிரமம் என அவர் உணர்ந்ததாலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த முடிவை சைமன் கடிச் எடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டன.

எனினும், இது குறித்துப் பேசியுள்ள அவர், ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டு, அதற்கான தொகையை ஒதுக்கி வைத்திருந்தோம். ஆனால், அணி நிர்வாகம் அதனை ஓரளவுக்கு கூட செயற்படுத்தாமல், தங்கள் இஷ்டத்திற்கு வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இப்படிப்பட்ட அணியுடன் இனிமேலும் பயணிக்க முடியாது என குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான சைமன் கடிச், ஐ.பி.எல் களத்தில் வீரராகவும், பயிற்சியாளராகவும் பல்வேறு அணிகளுடன் பயணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

46 வயதான சைமன் கடிச், அவுஸ்திரேலிய அணிக்காக 2001 முதல் 2010 வரை 56 டெஸ்ட் போட்டிகள், 45 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2015 முதல் ஐ.பி.எல் போட்டியில் பயிற்சியாளராக கொல்கத்தா, றோயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் பணியாற்றியுள்ளார். இதில் கொல்கத்தா அணியின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றிய சைமன் கடிச், கடந்த ஆண்டு வரை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வெளியேறும் நான்காவது நபர் சைமன் கடிச் ஆவார். இதற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்த டேவிட் வோர்னர் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியேறினார். அதன் பின்னர் பயிற்சியாளர்கள் ட்ரெவர் பெய்லிஸ், பிரெட் ஹெடின் ஆகியோரும் திடீரென இராஜினாமா செய்து வெளியேறினர்.

இதற்கெல்லாம் மறைமுக காரணமாக இருப்பது தலைமைப் பயிற்சியாளர் டொம் மூடி தான் என கூறப்படுகிறது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<