குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் குர்பாஸ்

344
Rahmanullah Gurbaz

ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி ஜேசன் ரோய்க்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 15 ஆவது பருவகாலம் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் சென்னை சுபர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், இம்முறை IPL தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய்யை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேசன் ரோய் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ச்சியாக பயோ-பபுள் பாதுகாப்பு வலையத்தில் விளையாடி வருவதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கூறி இந்த ஆண்டு IPL தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், அதிரடி வீரராகவும் உள்ள ஜேசன் ரோய்யின் விலகல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இவருக்கு மாற்று வீரராக அந்த அணி யாரைத் தேர்வு செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்துவந்தது.

இதனையடுத்து ஜேசன் ரோயின் இடத்திற்கு சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை நியமிக்க குஜராத் அணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரஹ்மனுல்லாஹ் குர்பாஸை குஜராத் டைட்டன்ஸ் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. இதனை குர்பாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதிசெய்துள்ளார்.

குஜராத்தின் முதல் தேர்வு இந்திய வீரர் விருத்திமான் சஹா என்று இருந்துள்ளது. ஆனால், சஹா சமீபத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, மேலதிக வீரராக அவருடன் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் பெயரையும் இணைத்து பிசிசிஐ ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏற்கனவே, ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மட் என இரண்டு ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, குர்பாஸ் ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரராக மாறவுள்ளார்.

பாகிஸ்தான் சுபர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட், லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா டைகர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதன் மூலம் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் பிரபலமானவராக குர்பாஸ் வலம்வருகின்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச T20 போட்டியில் களமிறங்கிய 20 வயதான குர்பாஸ், இதுவரை 20 T20 போட்டிகளில் விளையாடி 534 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 428 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 3 சதங்களும் அடங்கும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<