சன்ரைசர்ஸ் அணியில் முரளியுடன் இணையும் லாரா, ஸ்டெய்ன்

Indian Premier League - 2022

314

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடரின் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால், அடுத்த ஆண்டு முதல் 10 அணிகள் IPL தொடரில் ஆடவுள்ளன. இதனால் அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் ஆடுவதால், வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் IPL மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது.

இதற்கிடையே, மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும், தங்களுக்குத் தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட வீரர்கள் மெகா ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோல, டேவிட் வோர்னர், ரஷித் கான், ஜோனி பேயார்டோவ், மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு IPL தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழு இன்று (23) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். 2013 இலிருந்து 2019 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் பணியாற்றினார். அவரது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் அணி 2016ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்றது.

எனினும், 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளில் டொம் மூடி நீக்கப்பட்டு இங்கிலாந்தின் டிரெவெர் பெய்லிஸ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பயிற்றுவிப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக ஆடியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு IPL தொடரில் டொம் மூடி மீண்டும் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவானான பிரையன் லாரா, முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளருமான டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் சைமன் கேடிச்சும், களத்தடுப்பு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ஹேமங் பதானியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஹேமங் பதானிக்கு புதிய வீரர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தொடர்ந்து தக்கவைக்க அந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, அவரை ஹைதராபாத் அணியின் ஆலோசகர் குழாத்திலும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<