IPL தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ நேற்றைய தினம் (01) அதிரடியான துடுப்பாட்ட பிரதியொன்றை வெளிப்படுத்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
>> NSL தொடரில் சதமடித்து அசத்திய குசல், ஓஷத, கமிந்து
போட்டியை பொருத்தவரை முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில், கொல்கத்தா அணியின் அன்ரே ரசல் 31 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசி அணிக்கு இலகுவான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியை பொருத்தவரை அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டங்களை வேகமாக குவிக்க தடுமாறியிருந்த நிலையில், பானுக ராஜபக்ஷ வந்த வேகத்திலிருந்து சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளை விளாச தொடங்கியிருந்தார்.
தான் எதிர்கொண்ட டிம் சௌதியின் முதல் பந்தில் பௌண்டரியுடன் ஆரம்பித்த பானுக ராஜபக்ஷ, உமேஷ் யாதவின் பந்து ஓவரில் ஒரு பௌண்டரியை விளாசினார்.
தொடர்ந்து சிவம் மாவி வீசிய பந்து ஓவரின் முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டிய பானுக ராஜபக்ஷ, அடுத்த மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார். வெறும் 9 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களை குவித்து அதே ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்கும் போது, அவரின் ஓட்டவேகம் 344.44 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<