இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தில் எந்தவொரு இலங்கை வீரரும் எந்தவொரு அணியாலும் வாங்கப்படாமைக்கு இலங்கையின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
14ஆவது ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் பல்வேறு திருப்பங்களுடன் நடந்து முடிந்தது.
Video – IPL ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள் | Cricket Galatta
இந்த நிலையில், இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த 31 வீரர்கள் தமது பெயர்களை பதிவுசெய்திருந்த நிலையில், வீரர்கள் ஏலத்துக்கு 9 வீரர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
இதன்படி, இலங்கையிலிருந்து குசல் பெரேரா, திசர பெரேரா, கெவின் கொத்திகொட, மஹீஸ் தீக்ஷன, தசுன் ஷானக, இசுரு உதான, விஜயகாந்த் வியாஸ்காந்த், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். ஏலத்துக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, சென்னையில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணி சார்பாக பங்கேற்ற வீரர்கள் எவரும், எந்த அணிக்காகவும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
இதில் குசல் பெரேரா, திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகிய மூன்று வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் களமிறக்கப்பட்ட போதிலும், எந்தவொரு அணியும் இலங்கை வீரர்களை வாங்குவதற்கு முன்வரவில்லை.
14 வருடகால ஐ.பி.எல் வரலாற்றில் முதல்தடவையாக எந்தவொரு இலங்கை வீரரும் ஏலத்தில் வாங்கப்படாத சந்தர்ப்பமாக இது பதிவாகியது.
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரவிந்த டி சில்வா
இந்த நிலையில், இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை அணி வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாதது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகர் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் இந்திய ஊடகமொன்று வழங்கி செவ்வியில் தங்களது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.
இதில் மஹேல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், ”ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர்கள் ஏலத்தில் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கை வீரர்கள் இதில் இருந்து பாடம் கற்க வேண்டும். அவர்கள் விழித்துக்கொண்டு ஐ.பி.எல் போன்ற மிகப் பெரிய தொடர்களில் பங்கேற்க தயாராக வேண்டும்.
ஐ.பி.எல் போன்ற பெரிய தொடர்களில் பெரும்பாலும் அயல் நாடுகளில் இருந்து வேகப் பந்துவீச்சாளர்கள், சகலதுறை வீரர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் அதற்கு சிறிய பற்றாக்குறை உள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் இல் விளையாடுவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். தற்போது எமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமை கவலையளித்தாலும், பொறுமையாக இருந்தால் உலகம் போற்றுகின்ற வீரர்களை எம்மால் உருவாக்க முடியும்.
திறமை அடிப்படையிலே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு – மஹேல
ஐ.பி.எல் இல் விளையாடுவதற்கு உலகின் முன்னணி வீரர்களுக்கு மாத்திரம் தான் தற்போது வாய்ப்பு கிடைக்கின்றது. என்னைப் பொறுத்தமட்டில் இன்னும் கொஞ்சம் எமது கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தினால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குமார் சங்கக்கார கருத்து வெளியிடுகையில், ”இலங்கையில் திறமையான வீரர்கள் உள்ளார்கள் என்பதை உறுதியாக கூறுவேன். எனினும், இலங்கைக் கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணங்கள் குறித்த தெளிவான நிழ்ச்சித்திட்டம் இல்லாததாலேயே இலங்கை வீரர்களை தெரிவு செய்ய முடியாமல் இருந்தது. ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடக்கூடிய வகையிலேயே வீரர் தெரிவு இடம்பெற்றது.
இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்படுகின்றவர்கள், தேசிய அணிக்கான சுற்றுத் தொடருக்காக எப்போது வேண்டுமானாலும் இடைவிலகலாம் என்ற ஐயம் நிலவுகின்றது” என குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<