இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து நடாத்தப்பட்டு வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 தொடரில் இதுவரை 13 பருவங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி முதல் மே மாதம் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடருக்கு ஒவ்வொரு அணி வீரர்களும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
IPL 2021 – அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
அதேபோல, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரஸின் தாக்கமும் இம்முறை IPL தொடரை நடத்துவதில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இம்முறை IPL தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே பல முன்னணி வீரர்கள் காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இதன் காரணமாக மாற்றீடு வீரர்களை உடனடியாக இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது உபாதைக்குள்ளான ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகிய மூவரும் மீண்டும் தத்தமது அணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.
செய்த தவறுகளை திருத்த எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதேபோல, இந்தியாவுடனான ஒருநாள் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய இயென் மோர்கனும் கொல்கத்தா அணிக்காக முதலாவது போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் இம்முறை IPL போட்டியில் விளையாடுகின்ற வாய்ப்பை இழந்த வீரர்கள் குறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம்.
மிட்செல் மார்ஷ் (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான மிட்செல் மார்ஷ், இம்முறை IPL தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
நீண்ட நாட்கள் உயிர்ப் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற IPL தொடரில் பெங்களூர் அணிக்கெதிரான 3ஆவது லீக் ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் கணுக்கால் உபாதைக்குள்ளானார். இதனால் IPL தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இதேவேளை, இம்முறை IPL தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள மிட்செல் மார்ஷிற்குப் பதிலாக, அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ரோய்யை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையும் ஜேசன் ரோய்
கடந்த வருட IPL தொடருக்கான டெல்லி அணியில் இருந்த ஜேசன் ரோய், சில சொந்த காரணங்கள் காரணமாக கடந்த IPL தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டேனியல் சம்ஸ் என்னும் ஆஸ்திரேலிய வீரரை டெல்லி அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் மொத்தம் 144 ஓட்டங்களையும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 115 ஓட்டங்களைக் ஜேசன் ரோய் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் அய்யர் (இந்தியா)
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயஸ் அய்யருக்கு அடுத்த நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், இந்த வருடத்திற்கான IPL தொடரில் இருந்து முழுமையாக அவர் விலகினார். ஸ்ரேயாஸ் அய்யரின் இந்த விலகலானது டெல்லி அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. குறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற IPL தொடரில் டெல்லி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமையும் அவரையே சாரும்.
இதனிடையே, ஸ்ரேயாஸ் அய்யருக்குப் பதிலாக டெல்லி அணியின் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் சில தினங்களாக குழுப்பம் நீடித்து வந்தது.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராகும் ரிஷப் பண்ட்
இதில் அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் டெல்லி அணியில் இருப்பதால், ஸ்மித் அல்லது அஸ்வின் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வருடம் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக, அஸ்வின் தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என பெரும்பாலான ஊடகங்கள் கணித்திருந்தன.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த அணியின் விக்கெட் காப்பபாளரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பாண்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி அறிவித்தது.
ஜொப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்த மீன் தொட்டியை சுத்தம் செய்த போது இவரது வலது கையில் நடுவிரலில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழுவின் உதவியுடன் இந்திய தொடரில் பங்கேற்ற இவர், 2 டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 விளையாடினார்.
அப்போது வலது முழுங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இம்முறை IPL தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார்.
பெங்களூர் அணியின் இரண்டாவது வீரருக்கு கொவிட்-19!
இந்த நிலையில், ஜொப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர, வலது கை நடுவிரலில் சத்திரசிகிச்சை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜொப்ரா ஆர்ச்சஐருக்கு இம்முறை IPL தொடரின் முதல் பாதி போட்டிகளில் பங்கெடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், அவரால் IPL போட்டிகளில் விளையாட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முக்கிய வேகப் பந்துவீச்சாளராக திகழும் ஜொப்ரா ஆர்ச்சர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும், ஜொப்ரா ஆர்ச்சருக்குப் பதிலாக இதுவரை எந்தவொரு மாற்றீடு வீரர்களும் அறிவிக்கப்படவில்லை.
ஜோஸ்வா பிலிப் (அவுஸ்திரேலியா)
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் விக்கெட் காப்பளரான ஜோஸ்வா பிலிப், இம்முறை IPL தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.
தனது சொந்த காரணங்களுக்காக இந்த வருட IPL தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்துள்ளது.
கடந்த வருட IPL தொடரின் மூலம் பெங்களூரு அணிக்கு அறிமுகமான ஜோஸ்வா பிலிப், 5 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 78 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறையும் சம்பியன் கனவுகளுடன் றோயல் செலஞ்சர்ஸ்
இதனையடுத்து, ஜோஸ்வா பிலிப்புக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் பின் ஆலனை இணைத்துக்கொள்ள பெங்களூர் அணி நடவடிக்கை எடுத்தது.
நியூசிலாந்து அணியின் இளம் வீரரான பின் ஆலன், அவரது அடிப்படை விலையான 20 இலட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி எடுத்துள்ளது. பின் ஆலன் IPL தொடரில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.
ஜோஸ் ஹேசல்வூட் (அவுஸ்திரேலியா)
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் இந்த ஆண்டு IPL தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் இவர், திடீரென IPL தொடரில் இருந்து வெளியேறியது சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.
இந்த நிலையில், தனது விலகல் குறித்து பேசிய ஹேசல்வூட்,
நான் கடந்த பத்து மாதங்களாக பாதுகாப்பு வளையம் மற்றும் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தாருடன் நேரம் செலவிட திட்டமிட்டு இருக்கிறேன். இதன்பிறகு நாங்கள் சில டி-20 தொடரில் விளையாட இருக்கிறோம்.
இதன்பிறகு டி-20 உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாட இருப்பதால் என்னால் தொடர்ந்து பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது கடினம். மேலும், நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இருக்க விரும்புகிறேன்.இதன் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஹேசல்வூட் கடந்த ஆண்டு IPL ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த தொடரினை வெற்றிகரமாக மாற்றுமா சென்னை சுபர் கிங்ஸ்?
அத்துடன், கடந்த ஆண்டு மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டுக்களை மாத்திரம் வீழ்த்தி இருந்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<