இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 14ஆவது பருவம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், IPL தொடரின் எஞ்சிய போட்டிகள் இம்மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அபுதாபி, டுபாய் மற்றும் சார்ஜா மைதானங்களில் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
>> IPL போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
இதனிடையே, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பாமாகவுள்ள 30ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரின் முதல் பாதி போட்டிகளின் முடிவில் அதிக ஓட்டங்களைக் குவித்த 5 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
1. ஷிகர் தவான் (டெல்லி கெபிடல்ஸ்)
டெல்லி கெபிடல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 380 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் 3 அரைச் சதங்களும் உள்ளடங்கும். அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2. கே.எல்.ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்)
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவரான ராகுல் இம்முறை IPL தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்ததுடன், அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இரண்டாவது வீரராக இடம்பிடித்தார்.
இதுவரை 7 போட்டிகளில் 4 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 331 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், 91 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.
3. பாப் டூ ப்ளெசிஸ் (சென்னை சுப்பர் கிங்ஸ்)
இம்முறை IPL தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த டூ ப்ளெசிஸ், இதுவரை 7 போட்டிகளில் 320 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் மொத்தம் 4 அரைச் சதங்களும் அடங்கும்.
எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் அபாரமாக விளையாடிய அவர் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகினார். இதனால் IPL தொடரின் 2ஆவது பாதி ஆட்டத்தில் பாப் டூ ப்ளெசிஸ் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. பிரித்வி ஷோ (டெல்லி கெபிடல்ஸ்)
இந்திய அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அண்மையில் இலங்கையில் நிறைவுக்கு வந்த ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய டெல்லி வீரர் பிரித்வி ஷோ இம்முறை IPL தொடரின் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வரும் போது அதிக ஓட்டங்களைக் குவித்த நான்காவது வீரராக இடம்பிடித்துள்ளார்.
இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 அரைச் சதங்களுடன் 308 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
5. சஞ்சு சம்சன் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
இம்முறை IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு வருகின்ற சஞ்சு சம்சன், IPL தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் 7 போட்டிகளில் விளையாடி 277 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சதமடித்த அவர் அதிகபட்சமாக 119 ஓட்டங்களைக் குவித்துள்ளார்
இதுஇவ்வாறிருக்க, IPL தொடரின் முதல் பாதியின் முடிவில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் மயாங்க் அகர்வால் (பஞ்சாப் கிங்ஸ் – 260 ஓட்டங்கள்), ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ரோயல்ஸ் – 254 ஓட்டங்கள்), ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ் 250 ஓட்டங்கள்), ஜொனி பெயார்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 248 ஓட்டங்கள்), கிளென் மெக்ஸ்வெல் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 223 ஓட்டங்கள்) ஆகியோர் 6 முதல் 10 வரையான இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, பாப் டூ ப்ளெசிஸ், ஜோஸ் பட்லர், ஜொனி பெயார்ஸ்டோ ஆகிய வீரர்கள் இம்முறை IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடாத காரணத்தால் இந்திய வீரர்களுக்கும், புதிய வீரர்களுக்கும் இந்தப் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<