IPL இல் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் ஹர்ஷல் பட்டேல்

Indian Premier League – 2021

294
IPL

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத ஒரு வீரராக IPL போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் பெற்றுக்கொண்டார்.

IPL தொடரில் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதுமாத்திரமின்றி, இம்முறை IPL தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களில் 26 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார்.

அத்துடன், சர்வதேசப் போட்டியில் விளையாடாத வீரராக IPL தொடரில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு IPL  தொடரில் இதே ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சஹால் 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்ததுடன், அந்த சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஹர்ஷல் பட்டேல் முறியடித்தார்.

இதுஇவ்வாறிருக்க, IPL இன் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ உள்ளார். இவர் 2013 ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

எனவே, பிராவோவின் அந்த சாதனையை முறியடிக்க ஹர்ஷல் பட்டேலுக்கு இன்னும் 6 விக்கெட்டுக்கள் மாத்திரமே தேவைப்படுகின்றன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<