பணம் கொழிக்கும் இந்திய ப்ரிமியர் லீக் (IPL) தொடரில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த வாரம் அங்கே தினமும் 80 ஆயிரம் தொற்றாளர்கள் சராசரியாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் கடந்த 4 நாட்களாக பதிவாகியிருக்கின்றனர். இந்தியாவில் இதுவரை 12,928,574 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 166,892 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வருடம் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் 70 ஆயிரம் ஆக இருந்த போதே IPL போட்டிகள் இந்தியாவில் நடக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து IPL போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது.
>> IPL தொடரின் பிரதான அனுசரணையாளராக மீண்டும் VIVO நிறுவனம்
ஆனால் இந்த முறை இந்தியாவில் தினமும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியிருக்கின்றனர். பல மாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. முக்கியமாக மும்பை, சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இந்தியாவில் IPL நடைபெறுகின்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவின் 6 இடங்களில் IPL தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும், கொரோனாவால் வீரர்கள், ஊழியர்கள் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் IPL போட்டிகள் திட்டமிட்டபடி முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதுஎவ்வாறாயினும். IPL தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (09) ஆரம்பமாகியது. முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றிகளைப் பதிவுசெய்தன.
>> பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதையடுத்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடவும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வான்கடே மைதானத்தின் அருகில் வசிப்பவர்கள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். IPL போட்டிகளில் விளையாடும் வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் மைதானத்தின் வெளியில் அதிகமாக கூடுவார்கள் என்றும் அதை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கொரோனா பரவலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் வான்கடே மைதானத்தின் அருகில் அதிகமான குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் காணப்படுவதால் போட்டிகளை மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு மாற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
>> IPL 2021 – அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
IPL போட்டி நடைபெறும் நகரங்களில் கொரோனா வேகமாக பரவும் பட்சத்தில் மாற்று இடமாக ஹைதராபாத் அல்லது இந்தூரில் போட்டியை நடத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாற்று மைதானங்கள் இருந்தபோதிலும், மும்பையில் திட்டமிடப்பட்ட போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் BCCI தீவிரமாக உள்ளது.
இது இவ்வாறிருக்க, டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ உள்ளிட்ட IPL அணிகள், மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்கள், BCCI பணியமர்த்தியிருந்த நிகழ்ச்சி முகாமையாளர்கள் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என அதிகளவில் கொரோனா பாதிப்பால் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, IPL போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்டவர்களில் பட்டியலை தற்போது காணலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் நிதிஷ் ராணா அந்த அணியின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானார்.
எனினும், 12 நாட்கள் சுய தனிமைப்படுத்தலின் பிறகு அணியின் உயிரியல் பாதுகாப்பு வளையத்திற்குள் மீண்டும் இணைந்து கொண்டதுடன், அணியுடன் இணைந்து பயிற்சிகளையும் முன்னெடுத்தார்.
>> இந்திய லெஜண்ட்ஸ் அணியின் இர்பான் பதானுக்கும் கொரோனா உறுதி!
கொரோனா வைரஸிற்குப் பிறகு மீண்டும் அணியுடன் இணைந்து கொண்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், எனக்கு கொரோனா வைரஸ் ஏற்படும் என எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றினேன். இதிலிருந்து மீண்டது மகிழ்ச்சி. அனைவரும் விதிகளை சரியாக பின்பற்றுங்கள் என தெரிவித்தார்.
கடந்த 4 சீசன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் 27 வயதுடைய நிதிஷ் ராணா, 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஒவ்வொரு தொடரிலும் எடுத்துள்ளார்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல்லுக்கு கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்
தொடர்ந்து 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் படிக்கல் இருந்தார். அவருடன் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தகவல் தொடர்பில் இருந்து உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர்.
தேவ்தத் படிக்கலுக்கு தொடர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு PCR பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
>> அக்ஷர் பட்டேலை தொடர்ந்து தேவ்துத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்று
இதுகுறித்து RCB அணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
RCB அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார். தேவ்தத் படிக்கலுக்கு BCCI விதிமுறைகள்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, கொரோனாவிலிருந்து தேவ்தத் படிக்கல் குணமடைந்த நிலையில், RCB அணியின் பாதுகாப்பு வளையத்துக்குள் முறைப்படி இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அணி நிர்வாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற IPL தொடரில் அறிமுகமான தேவ்தத் படிக்கல், 15 போட்டிகளில் 473 ஓட்டங்களைக் குவித்து அனைவரையும் ஈர்த்தார். இறுதியாக நடைபெற்ற முஸ்டாக் அலி டி-20 மற்றும் விஜய் ஹஸாரே ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது,
தற்போது சுயதனிமைப்படுத்தலில் உள்ள அவர் அணியின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரோயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் சேம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஏப்ரல் 7ஆம் திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், அவுஸ்திரேலிய வீரர் டேனியல் சேம்ஸ் கடந்த 3ஆம் திகதி இந்தியாவை வந்டைந்தார்.
>> பெங்களூர் அணியின் இரண்டாவது வீரருக்கு கொவிட்-19!
அவருக்கு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேனியல் சேம்ஸ் தற்போது எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், நலமாக உள்ளார். சுய தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். RCB அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவருடன் தொடர்பில் உள்ளனர். அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் காப்பு மற்றும் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் குழுவின் ஆலோசகருமான 58 வயது கிரண் மோரே, ஏப்ரல் 6ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கும் கிரண் மோரே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
>> மும்பை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19
அத்துடன், BCCI இன் சுகாதார வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிரண் மோரேவும் பின்பற்றி வருகின்றனர் என்றும், மருத்துவக் குழுவினர் கிரண் மோரேவின் உடல்நலனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மைதான ஊழியர்கள்
கடந்த வாரத்தில் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் மைதானத்திலேயே தனியிடம் ஒதுக்கித்தரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயினும், அங்கு மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒளிபரப்பு ஊழியர்கள்
கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு குழுவின் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அத்துடன், BCCI பணியமர்த்தியிருந்த நிகழ்ச்சி முகாமையாளர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<