IPL போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

Indian Premier League - 2021

289
IPL Twitter

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்று வந்த IPL 2021 சீசன், கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இம்மாதம் 19ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது.

அதற்காக அனைத்து IPL அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றுவிட்டனர். அங்கு கட்டாய 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

IPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்

இந்த நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை துபாயில் நடைபெற இருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், IPL தொடரின் 2ஆவது பகுதி ஆட்டங்களைக் காண துபாய், சார்ஜா, அபுதாபி மைதானங்களில் ரசிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று IPL நிர்வாகம் நேற்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் எண்ணிக்கை அளவு வெளியிடப்படவில்லை. எனினும், மைதானத்தின் மொத்த இருக்கை அளவில் 50 சதவீத அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை ரசிகர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், போட்டிக்கான டிக்கெட்டுக்களை இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் ஏழு இலங்கை வீரர்கள்

இதன்படி IPL போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இன்று முதல் www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையத்தளத்திலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICCயின் T20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 17இல் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கான முன்னோட்டமாக தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…