இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 13ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெறவிருந்து அவை கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டிருந்தன. எனினும், இவ்வாறு தடைப்பட்டுப்போன ஐ.பி.எல் போட்டிகளை இந்த ஆண்டு இந்தியாவில் நடாத்துவது கடினம் என்பதால், பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அதனை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் வேறு நாடு ஒன்றில் நடாத்துவது தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது.
எனினும், T20 உலகக் கிண்ணமும் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற இருந்த காரணத்தினால் பி.சி.சிஐ. T20 உலகக் கிண்ணம் தொடர்பிலான ஐ.சி.சி. இன் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி ஐ.சி.சி. இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதனை அடுத்து பி.சி.சி.ஐ. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரினை நடாத்தும் இடமாக ஐக்கிய அரபு இராச்சியத்தினை அறிவித்திருந்ததுடன், தொடருக்கான திகதிகளை பின்னர் வெளியிடும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே பி.சி.சி.ஐ. மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் செப்டம்பர் 19ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் செப்டம்பர் 19ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் ஐ.பி.எல். போட்டிகள் நவம்பர் 08ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றன. இந்த விடயத்தினை ஐ.பி.எல். தொடரின் நிர்வாக தலைவராக இருக்கும் பிரிஜேஷ் பட்டேல் இன்று (24) உறுதி செய்திருந்தார்.
வீடுகளில் இருந்து இடம்பெறவுள்ள ஐ.பி.எல் வர்ணனை
இதேநேரம், மேலதிக கலந்துரையாடல்களின் பின்னர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் போட்டி அட்டவணை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் பிரிஜேஷ் பட்டேலினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க