இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 7 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு தொடர்பான செய்தியை ஐ.சி.சி வெளியிட்டதன் பின்னர், ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது தொடர்பான உறுதியான அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் சபை வெளியிட காத்திருக்கிறது.
ஐ.பி.எல் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்த திட்டம்?
இந்த வருடம் நடைபெற எதிர்பார்க்கப்படும் 13ஆவது ஐ.பி.எல்
T20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதுதொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஐ.சி.சி சந்திப்பொன்றை மேற்கொண்டு, உலகக் கிண்ணம் நடைபெறுவது தொடர்பில் அறிவிக்கவுள்ளது.
இப்போதைய நிலையில், ஐ.பி.எல். தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றவுள்ளதாகவும், அதற்காக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு பயணம் செய்வதற்கான அனுமதியையும் இந்திய கிரிக்கெட் சபை, இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்திய கிரிக்கெட் சபையின் சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெற்றதில், ஐ.பி.எல். தொடரை முழுமையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்தியாவில் தொடரை நடத்துவதற்கான எண்ணம் இருந்துள்ள போதும், இந்தியாவில் தற்போது வேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியம் தொடரை நடத்தும் வாய்ப்பை பெறவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் ஐ.பி.எல். தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்றால், இரண்டாவது முறையாக ஐ.பி.எல். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் காரணமாக ஐ.பி.எல். தொடரின் முதல் 20 போட்டிகளும் டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெற்றிருந்தன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை, ஐ.பி.எல். நடத்துவதற்கான வாய்ப்பை இந்திய கிரிக்கெட் சபைக்கு வழங்குவதாகவும், அதற்கான அனைத்து உதவிகளையும், இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டால் வழங்க தயார் எனவும் குறிப்பிட்டிருந்தது. அதேநேரம், இந்திய கிரிக்கெட் சபையின் அனுமதிக்கு மாத்திரம் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.
அதன்படி, ஐ.பி.எல். தொடர் இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுமாயின் டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய முக்கிய மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், ஐசிசியின் அகடமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்பதில் எந்தவிதமான உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானங்களில் நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவது உறுதிசெய்யும் பட்சத்தில், அணிகள் சுமார் ஒரு மாத காலத்துக்கு முன்னர், அங்கு பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த மாதங்களில் வீரர்களின் பயிற்சி குறைவடைந்துள்ள நிலையில், அதனை சரிசெய்யவும் மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்களை கருத்திற்கொண்டும் ஒருமாத இடைவெளிக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அணிகள் செல்ல எதிர்பார்த்துள்ளன.
ஐ.பி.எல் இறுதிப்போட்டி நவம்பர் 7 ஆம் திகதி வைக்கப்படுவதற்கான முக்கிய காரணம், இந்திய வீரர்கள் டிசம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு பயணமாகவுள்ளனர். எனவே, அதன் காரணமாக நவம்பர் ஆரம்பப்பகுதியில் ஐ.பி.எல். தொடர் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், ஏற்கனவே ஐ.பி.எல். தொடர் இலங்கையில் நடைபெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டிருந்த போதும், தற்போது கொவிட்-19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இலங்கையில் குறித்த தொடர் நடக்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க