உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ஐ.சி.சி அறிவித்த உடன் ஐ.பி.எல் தொடரின் திகதியை அறிவிக்க தயாராக உள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஸ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்திய வீரர்களின் பங்கேற்புடன் மாத்திரம் ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொள்ளாது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் திகதி நடைபெறவிருந்த ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் காலவiரியின்றி ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து ஐ.பி.எல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்தது. இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பிசிசிஐ–க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்தது.
குறிப்பாக ஐபிஎல் தொடர் நடைபெறாததால் பிசிசிஐ நிர்வாகத்திற்கு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய ஆகஸ்ட் மாதம் முதல் அக்டொபர் காலத்திற்குள் சர்வதேச தொடர்கள் நடைபெறவில்லை என்றால் ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனிடையே, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து வெளியிடுகையில்,
ஐ.பி.எல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் போட்டித் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஸ் பட்டேல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவிக்கையில்,
செப்டம்பர் – அக்டோபர் மாதம் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐ.சி.சியின் முடிவில்தான் இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண டி20 தொடரை ஐ.சி.சி நடத்தவில்லை என்றால். அந்தத் திகதிகளை ஐ.பி.எல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம்.
மேலும், இந்த தொடர் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வேண்டும் தான். ஆனால், இந்திய வீரர்களை மட்டுமே வைத்து தொடரை நடத்த முடியாது.
எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பிறகு தான் அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும் என தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<