சன் ரைஸஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் அண்ட்ரூ ரசலின் அதிரடி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்று இந்த பருவகாலத்திற்கான முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12 ஆவது பருவகாலத்திற்கான இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (24) மாலை கொல்கத்தா ஈடின் காடின்ஸ் மைதானத்தில் மோதின.
அற்புத சுழற்பந்தினால் சென்னை அணிக்கு முதல் வெற்றி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஆரம்ப விக்கெட்டுக்காக ஒரு வருட தடையிலிருந்து மீண்டு விளையாடும் டேவிர் வோர்னர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜொனி பெயர்ஸ்ட்டோ ஆகியோர் 118 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
39 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் பெயர்ஸ்ட்டோ பியூஸ் சௌலாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, அண்ட்ரூ ரசல் வீசிய 15 ஆவது ஓவரின் இறுதி பந்தில் 85 ஓட்டங்களுடன் (9 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்) டேவிட் வோர்னர் பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடுகளம் நுழைந்த யூசுப் பதான் 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்ற வேளையில் அண்ட்ரூ ரசலின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விஜய் சங்கர் 24 பந்துகளுக்கு முகம் கொடுத்து 2 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் அண்ட்ரூ ரசல் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பியூஸ் சௌலா 23 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கும் 7 பந்துவீச்சாளர்களை உபயோகப்படுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்கது.
182 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. ஆஸி. வீரர் கிறிஸ் லைன் 7 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகீப் அல் ஹசனின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிதிஸ் ரனாவுடன் ஜோடி சேர்ந்த ரொபின் உத்தப்பா ஜோடி இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர். 35 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ரொபின் உத்தப்பா சித்தார்த் கௌலின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடுகளம் நுழைந்த அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் வந்த வேகத்திலேயே 2 ஓட்டங்களுடன் சன்டீப் சர்மாவின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஓட்டங்களை பெற்றுவந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிதிஸ் ரனா அரைச்சதம் கடந்து 68 ஓட்டங்களுடன் (8 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்) ரஷீட் கானின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் 27 பந்துகளுக்கு 64 ஓட்டங்கள் பெறவேண்டிய இக்கட்டான நிலை கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டது. ஆடுகளத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அண்ட்ரூ ரசல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இறுதி 3 ஓவர்களில் 53 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சித்தார்ட் கௌல் வீசிய 18 ஆவது ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது. பின்னர் புவனேஸ்வர் குமார் வீசிய 19 ஆவது ஓவரில் 21 ஓட்டங்கள் பெறப்பட்டது. இறுதியில் ஒரு ஓவருக்கு 13 ஓட்டங்கள் மாத்திரம் பெறவேண்டிய நிலை கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டது.
சகீப் அல் ஹசன் வீசிய குறித்த இறுதி ஓவரின் 4 ஆவது பந்தில் சிக்ஸர் மூலம் 2 பந்துகள் மீதமிருக்க கொல்கத்தா அணியின் வெற்றி 6 விக்கெட்டுக்களினால் பதிவு செய்யப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அண்ட்ரூ ரசல் வெறும் 19 பந்துகளில் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை (4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள்) பெற்றுக்கொண்டார். அவருக்கு ஜோடியாக இருந்த சுப்மன் கில் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களை (2 சிக்ஸர்கள்) பெற்றுக்கொண்டார்.
சன் ரைஸஸ் அணியின் பந்துவீச்சில் ரஷீட் கான், சித்தார்த் கௌல், சன்டீப் சர்மா மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
இதன் மூலம் 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவு செய்தது. போட்டியின் ஆட்ட நாயனாக சகலதுறையிலும் பிரகாசித்த அண்ட்ரூ ரசல் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்.
சன் ரைஸஸ் ஹைதராபாத் – 181/3 (20) – டேவிட் வோர்னர் 85(53), விஜய் சங்கர் 40(24), அண்ட்ரூ ரசல் 32/2, பியூஸ் சௌலா 23/1
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 183/4 (19.4) – நிதிஸ் ரனா 68(47), அண்ட்ரூ ரசல் 49(19), ரஷீட் கான் 26/1, சித்தார்த் கௌல் 35/1
முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுக்களினால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<