கோலாகலமாக இடம்பெற்று வரும், இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான, நேற்றைய போட்டியொன்றில் அதி சிறப்பான துடுப்பாட்ட வலிமையைக் காட்டியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணியினரை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரில், மொத்தமாக 12 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தா அணியின் தலைவர் கெளதம் கம்பீர் எதிர் அணிக்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கினார்.
தொடர்ந்து மைதானத்திற்கு விரைந்த ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணியினர் அஜங்கயா ரஹானே மற்றும் ராகுல் த்ரிபதி ஆகியோரின் அபார ஆட்டத்தினால், நல்லதொரு ஆரம்பத்தினைப் பெற்றிருந்தனர்.
புனே அணியின் முதல் விக்கெட்டாக ராகுல் த்ரிபதி, பியூஷ் சவ்லானவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேறினார். 7 பவுண்டரிகளை விளாசியிருந்த த்ரிபதி மொத்தமாக 23 பந்துகளிற்கு 38 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து, ரஹானே 41 பந்துகளில் 46 ஓட்டங்களினை சூபர்ஜயன்ட் அணிக்காக பெற்று வலுச்சேர்த்தார்.
தொடர்ந்து, புனே அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் தனது பங்கிற்காக பெற்றுத்தந்த அதிரடி அரைச்சதத்தின் உதவியினாலும், மஹேந்திர சிங் தோனி (23) மற்றும் டேனியல் கிரிஸ்டியன் (16) ஆகியோரின் அதிவிரைவான துடுப்பாட்டத்தினாலும், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த சூபர்ஜயன்ட் அணியினர் 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற ஸ்மித் மொத்தமாக 37 பந்துகளிற்கு 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சில், இடதுகை சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
பின்னர், 183 ஓட்டங்கள் என்கிற சவாலான வெற்றி இலக்கினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடியிருந்த கொல்கத்தா அணியினர், தமது ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான சுனில் நரேனை 16 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் பறிகொடுத்திருந்தனர்.
எனினும், களத்தில் நின்றிருந்த மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கொல்கத்தா அணியின் தலைவர் கெளதம் கம்பிர், களம் நுழைந்த ரொபின் உத்தப்பாவுடன் இணைந்து 158 ஓட்டங்களை இரண்டாம் விக்கெட்டிற்காக பகிர்ந்து போட்டியின் வெற்றிக்கோட்டை தொட அடித்தளம் போட்டிருந்தனர்.
கொல்கத்தா அணியின் இரண்டாவது பெரிய இணைப்பாட்டமான இதன் மூலம், 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களுடன் அவ்வணி வெற்றியாளர்களாக மாறியதுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் தரவரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தள்ளி முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இவ்வெற்றிக்கு தனது சிறந்த துடுப்பாட்டம் மூலம் பங்களிப்பு செய்திருந்த வீரர்களில் ஒருவரான ரொபின் உத்தப்பா இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்டத்தினை பதிவு செய்திருந்தார். வெறும் 47 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்ட அவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 87 ஓட்டங்களையும், கெளதம் கம்பிர் 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
முக்கிய தருணங்களில் பிடியெடுப்புக்களை நழுவவிட்டு மோசமான களத்தடுப்பினை வெளிக்காட்டியிருந்த ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணியின் பந்து வீச்சில், டேனியல் கிரிஸ்டியன் மற்றும் ஜய்தேவ் உனட்கேட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
ரைஸிங் புனே சூபர்ஜயன்ட்ஸ்– 182/5 (20) – ஸ்டீவ் ஸ்மித் 51*(37), அஜங்கயா ரஹானே 46(41), ராகுல் த்ரிபதி 38(23), மஹேந்திர சிங் தோனி 23(11), குல்தீப் யாதவ் 31/2(4)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 184/3(18.1) – ரொபின் உத்தப்பா 87(47), கெளதம் கம்பீர் 62(46), டேனியல் கிரிஸ்டியன் 31/1(4)
போட்டி முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி.