ஐ.பி.எல் அரங்கில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 21 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
இதையடுத்து துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் களமிறங்கினர்.
இருவருமே அதிரடி காட்டி விளையாட அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்காக 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது கிறிஸ் கெய்ல், LBW முறையில் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசி 77 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதனையடுத்து அணித்தலைவர் கோஹ்லி 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கலாக 64 ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களும், கேதர் ஜாதவ் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஸ்மித் 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.
மறுபுறத்தில் மெக்கலம் அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா 8 பந்துகளில் 2 புண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, ஏரொன் பின்ச் 19(15), டினேஷ் கார்த்திக் 1(4), ரவீந்திர ஜடேஜா 23(22) ஓட்டங்களும் எடுத்து வெளியேற குஜராத் அணி தடுமாறியது.
எனினும் குஜராத் அணியின் இஷான் கிஷான் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 39 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் யுஸ்வேந்திரா சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்கள் எடுத்து 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
‘சிக்ஸர் மன்னன்’ என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் முடிசூடா மன்னராக விளங்கி வருகிறார்.
மேற்கிந்திய தீவுகள் டி20 சர்வதேச கிரிக்கெட் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கிறிஸ் கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான டி20 லீக்கில் இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
இந்த லீக் தொடர்களில் சிக்ஸர் மழை பொழிவதால் கெய்லுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் 286 போட்டிகளில் 9937 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 63 ஓட்டங்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் பத்தாயிரம் (10,000) ஓட்டங்களை கடக்கும் முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைக்கும் நோக்கத்தில் ஐ.பி.எல். 2017 பருவகாலத்தில் அவர் களமிறங்கினார்.
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 32 ஓட்டங்களும், டெல்லிக்கெதிராக 6 ஓட்டங்களும், மும்பை அணிக்கெதிராக 22 ஓட்டங்களும் எடுத்திருந்தார்.
மூன்று போட்டிகளில் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நேற்றைய தினம் குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கினார். இந்தப் போட்டியில் அவர் 3 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்ககளுடன் 77 ஓட்டங்களை குவித்தார்.
டி20 போட்டிகளில் இந்த போட்டிக்கு முன்பு வரை 289 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 18 சதங்கள மற்றும், 60 அரைச்சதங்கள் அடித்திருந்தார். இதில் 736 சிக்ஸர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.