திருப்பதியின் அதிரடியால் பிளே ஒப் வாய்ப்பை தக்கவைத்தது புனே அணி

406

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் லீக் போட்டிகளில் நேற்றைய வெற்றியின் மூலம் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி பிளே ஒப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற 41ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

யுவராஜ் சிங்கின் அதிரடி வீண் : போராடி வென்றது டெல்லி

பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள்..

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கௌதம் கம்பீர் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். சுனில் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கம்பீரைத் தொடர்ந்து ஜாக்சன்(10), யூசுப் பதான்(4) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், மணிஷ் பாண்டே 37(32), டி கிரண்ட் ஹோம் 36(19), சூர்ய யாதவ் 30(16) ஆகியோர் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை சேர்த்தது.

புனே அணி தரப்பில் உனகண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் 2 ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 156 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரகானே மற்றும் திருப்பதி ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய திருப்பதி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இவரை கட்டுப்படுத்த கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் திணறினர். 11 ஓட்டங்களில் ரஹானே வெளியேறினாலும் திருப்பதி நின்று அதிரடியாக விளையாடினார்.

அணித் தலைவர் ஸ்மித் 9 ஓட்டங்களிலும், மனோஜ் திவாரி 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் 14 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக செயற்பாட்டு முகாமையாளராக அருண டீ சில்வா

இவ்வாண்டு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு..

பின்னர் களமிறங்கிய டோனி 5 ஓட்டங்களில் வெளியேறி இம்முறையும் சொதப்பினார். பின் வரிசை வீரர்கள் திருப்பதிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க, 19.2 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்பதி 52 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி பிளே ஒப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 155/8 (20) – மனேஷ் பாண்டே 37(32), டி கிரண்ட் ஹோம் 36(19), சூர்ய யாதவ் 30(16)

ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் 158/6 (19.2) – திருப்பதி 93(52), வோக்ஸ் 18/3(4)