பத்தாவது ஐ.பி.எல் தொடரின் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்க்கமான போட்டியில் சஹீர்கான் தலைமையிலான டெல்லி அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புனே அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.
மெக்ஸ்வெல், சஹாவின் சிக்ஸர் மழையில் வீழ்ந்தது மும்பை
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சஞ்சு சாம்சன் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 3 ஓட்டங்களில் வெளியேற, டெல்லி அணி 9 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிஷப் பந்த் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த சாமுவேல்ஸ் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ஓட்டங்கள் அடித்து 19ஆவது ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களான ரகானே ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஆட்டமிழக்க, திரிபாதி 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய சுமித் 38 ஓட்டங்களை சேர்த்தார், இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி 45 பந்துகளை எதிர்கொண்டு 60 ஓட்டங்களை குவித்தார்.
ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையில் புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை மட்டும் குவித்து வெறும் 7 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
எம்மை எந்த அணியும் தொடரிலிருந்து வெளியேற்றலாம் : மாலிங்க
டெல்லி அணி சார்பில் சகீர்கான், மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், நதீம் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் தோல்வியின்மூலம் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் பிளேஓஃப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
போட்டியின் சுருக்கம்
டெல்லி டேர்டெவில்ஸ் 168/8(20) -நாயர் 64(45), பான்ட் 36(22)
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் 161/7(20) – திவாரி 60(45), ஸ்மித் 38(32)