சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்று வரும் நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரின் லீக் போட்டிகளில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத இலங்கை தேசிய அணியினர் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இது பல வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்கு திரும்பிய தர்ஜினி சிவலிங்கம் மற்றும் தேசிய வலைப்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச ஆகியோருக்கு கிடைத்த சிறந்த பெறுபேறாக அமைந்துள்ளது.
யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி
நான்கு அணிகள் பங்கு கொள்ளும்…
இன்று இடம்பெற்ற விறுவிறுப்பான அடுத்த ஆட்டத்தில் இலங்கை அபிவிருத்தி அணியினரை வீழ்த்திய சிங்கப்பூர் அணியினரும் இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கை எதிர் PSTAR
சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இன்றைய முதல் போட்டியில், PSTAR அணி இத்தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காமல் தரப்படுத்தலில் முதல் இடத்தில் உள்ள இலங்கை அணியை சந்தித்தது.
ஆட்டத்தின் முதல் கால் பகுதியில் எந்தவித அழுத்தங்களும் இன்றி ஆடிய இலங்கை அணியினர் 22 புள்ளிகளைப் பெற்ற அதேவேளை, எதிரணிக்கு 02 புள்ளிகளை மாத்திரம் விட்டுக் கொடுத்தனர்.
மீண்டும், யாழ் வீராங்கனை எழிலேந்தினியை கோல் சூட்டராகக் களமிறக்கி அடுத்த கால் பகுதியை ஆடிய இலங்கை மகளிருக்கு 23 புள்ளிகளைப் பெற முடிந்தது. அதேபோன்று, PSTAR அணியினர் 03 புள்ளிகளை மாத்திரமே பெற்றனர்.
எனவே, போட்டியின் முதல் பாதியில் இலங்கை அணி 45 – 5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் இடம்பெற்ற மூன்றாவது கால் பகுதிக்கு எழிலேந்தினிக்குப் பதிலாக, சர்வதேச மட்டத்தில் முன்னணி சூட்டராகத் திகழும் தர்ஜினி சிவலிங்கம் களத்திற்கு அழைக்கப்பட்டார். எனவே, அவரது ஒத்துழைப்புடன் இந்த கால் பகுதியையும் 29 – 2 எனக் கைப்பற்றிய இலங்கை அணியினர் 74 – 7 என முன்னிலை பெற்றனர்.
இந்தப் போட்டியின் வெற்றி உறுதியாகிய நிலையில் இறுதி கால் பகுதியை எதிர்கொண்ட இலங்கை தேசிய அணி வீராங்கனைகள் மீண்டும் எழிலேந்தினியையும் புதிய வீராங்கனைகள் சிலரையும் களத்திற்கு அழைத்தனர். இந்தப் பகுதியில் இலங்கை அணி 23 புள்ளிகளைப் பெற, PSTAR அணியினர் 6 புள்ளிகளைப் பெற்றனர்.
எனவே, போட்டி நிறைவில் இலங்கை தேசிய வலைப்பந்து அணி 97 – 13 என வெற்றியைப் பெற்று அனைத்து லீக் ஆட்டங்களையும் வென்ற அணியாக பதிவாகியது.
இலங்கை அபிவிருத்தி அணி எதிர் சிங்கப்பூர் தேசிய அணி
இறுதி லீக் ஆட்டத்தில் மோதிய இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் விளையாடிய தலா இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்திருந்தன. எனவே, இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணியை தீர்மானிக்கும் தீர்க்கமான ஆட்டமாக இந்த ஆட்டம் இருந்தது.
Photos: Singapore Vs. Sri Lanka | Invitational International Netball Tournament 2018
ThePapare.com | Viraj Kothalawala | 27/05/2018..
ஆட்டம் ஆரம்பித்தது முதல் இரு அணியினரும் மிகவும் வேகமான விளையாட்டை காண்பித்த போதும், அதிரடியான பந்துப் பரிமாற்றம் மற்றும் சிறந்த தடுப்புக்களை மேற்கொண்ட சிங்கப்பூர் வீராங்கனைகளின் முன்னிலையுடன் (21 – 10) முதல் கால் பகுதி நிறைவடைந்தது.
அதே வேகத்துடன் இரண்டாவது கால் பகுதியும் இடம்பெற்றது. முதல் பகுதி போன்றே ஆதிக்கம் செலுத்திய விருந்தினர் அணி 20 புள்ளிகளைப் பெற, இலங்கை மங்கையரால் 09 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது. எனவே, முதல் பாதி ஆட்டத்தில் 41 – 19 என சிங்கப்பூர் அணியினர் முன்னிலை பெற்றனர்.
அடுத்த கால் பகுதியிலும் சிங்கப்பூர் அணியினர் ஆதிக்கம் செலுத்த (17 – 06), மூன்றாவது கால்பகுதி நிறைவடையும்பொழுது இலங்கை அபிவிருத்தி அணி 33 புள்ளிகளால் பின்னிலையடைந்தனர்.
இந்நிலையில் இடம்பெற்ற இறுதி கால் பகுதியையும் 22 – 09 எனக் கைப்பற்றிய சிங்கப்பூர் வீராங்கனைகள், போட்டி நிறைவில் 80 – 34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நட்பு ரீதியிலான தொடரின் 6 லீக் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தரப்படுத்தலில் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுள்ள இலங்கை தேசிய அணி மற்றும் சிங்கப்பூர் தேசிய அணிகள் நாளை (30) இடம்பெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதேபோன்று, இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் PSTAR அணிகள் மூன்றாம் இடத்திற்கான மோதலில் பலப்பரீட்சை நடத்தும்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<