சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகள் வெற்றிகளைப் பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன.

அழைப்பு தொடரின் ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பலப்பரீட்சை

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள…

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் இங்கிலாந்தின் கழக அணியான PSTAR ஆகிய அணிகள் பங்குகொண்டன.  

இலங்கை தேசிய அணி எதிர் சிங்கப்பூர் தேசிய அணி

இன்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளின் பின்னர் நடந்த முதல் போட்டியில் ஆசியாவில் உள்ள முன்னணி அணிகளான சிங்கப்பூர் மற்றும் இலங்கை தேசிய அணிகள் மோதின.  

நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை தேசிய அணியில் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டதானது, அவர் அண்மையில் அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவத்தை வெளிப்படுத்த சிறந்த ஒரு வாய்ப்பாக இருந்தது.  

இந்நிலையில், சிரேஷ்ட வீராங்கனையான தர்ஜினி உட்பட தேசிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீராங்கனைகள், புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்கும் முதல் சர்வதேச போட்டியாக இது அமைந்தது.

இலங்கை எதிர் சிங்கப்பூர் இடையிலான போட்டியைப் பார்வையிட

ஆட்டத்தின் முதல் கால் பகுதியின் ஆரம்பத்தில் இரு அணியினரும் சம பலத்துடன் ஆடிய போதும், குறித்த கால் பகுதி நிறைவில் இலங்கை அணி 15- 10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது கால் பகுதியிலும் அதே வேகத்துடன் விளையாடிய இலங்கை வீராங்கனைகள் 18 புள்ளிகளைப் பெற, எதிர் தரப்பினரால் 7 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. எனவே, போட்டியின் முதல் பாதி நிறைவடையும்பொழுது இலங்கை வீராங்கனைகள் 33 – 17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

பின்னர் இடம்பெற்ற மூன்றாவது கால் பகுதியில் இலங்கை அணி 19 புள்ளிகளைப் பெற, சிங்கப்பூர் வீராங்கனைகள் 14 புள்ளிகளைப் பெற்றனர். எனவே, இந்தக் கால் பகுதியும் 52 – 31 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையின் முன்னிலையுடன் நிறைவு பெற்றது.

முதல் 3 கால் பகுதிகளிலும் இலங்கை அணிக்கு கோல்களை மலை போன்று பெற்றுக் கொடுத்த அனுபவ வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இறுதி கால் பகுதியில் ஓய்வு வழங்கப்பட, அவருக்கு மாற்றீடாக ஹசிதா மெண்டிஸ் உள்ளே வந்தார்.  

>> 3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு

இந்நிலையில் 21 புள்ளிகள் முன்னிலையுடன் இறுதி கால் பகுதியில் ஆடிய இலங்கை அணியினர் இந்த 15 நிமிடங்களில் 13 புள்ளிகளைப் பெற்றனர். அதேவேளை, அபாரமாக ஆடிய சிங்கப்பூர் அணியினர் 14 புள்ளிகளைப் பெற்று முதல் முறை ஒரு கால் பகுதியில் முன்னிலையடைந்தனர்.

எனினும் நிறைவில் மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை வீராங்கனைகள் தொடரின் முதல் போட்டியை 65 – 45 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தினர்.


இலங்கை அபிவிருத்தி அணி எதிர் PSTAR அணி

பாடசாலை வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி அணியினர் இந்தப் போட்டியின் முதல் கால் பகுதியில் 21 புள்ளிகளைப் பெற, இங்கிலாந்து வீராங்கனைகளால் 07 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது.

தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய இலங்கையின் இளம் மங்கைகள் 15 – 04 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாம் கால் பகுதியை தம்வசப்படுத்த, போட்டியின் முதல் பாதியில் இலங்கை அபிவிருத்தி அணி 36 – 11 என்ற புள்ளிகளைப் பெற்று 25 புள்ளிகளால் முன்னிலை பெற்றது.

இலங்கை அபிவிருத்தி அணி எதிர் PSTAR இடையிலான போட்டியைப் பார்வையிட

மீண்டும் மூன்றாவது கால் பகுதியில் இலங்கை தரப்பினர் 20 புள்ளிகளைப் பெற, PSTAR அணியினரால் 04 புள்ளிகளை மாத்திமே பெற முடிந்தது. (இலங்கை அபிவிருத்தி அணி 53 – 14 PSTAR)

தொடர்ந்து இறுதி கால் பகுதியையும் 15 – 04 என இலகுவாகக் கைப்பற்றிய இலங்கை அபிவிருத்தி அணியினர் போட்டியில் 71 – 22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று முதல் போட்டியை சிறப்பான முறையில் நிறைவு செய்தனர்.

இந்த தொடரின் இரண்டாவது நாளான நாளையும் (28) இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. நாளைய முதல் போட்டியில் சிங்கப்பூர் அணி PSTAR அணியை எதிர்கொள்ளும் அதேவேளை, அடுத்த போட்டியில் இலங்கை தேசிய அணி இலங்கை அபிவிருத்தி அணியை எதிர்கொள்ளவுள்ளது.