தசுன் ஷானக்கவின் அதிரடியில் வீழ்ந்த மெண்டிஸின் அணி

3212

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களிடையே விளையாடி முடித்திருக்கும் பயிற்சி T20 போட்டியில், தனன்ஞய டி சில்வா தலைமையிலான பதினொருவர் அணி, குசல் மெண்டிஸின் பதினொருவர் அணியினரை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது. 

கொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர

தற்போது கண்டி பல்லேகலையில் நடைபெறுகின்ற 12 நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சி முகாமில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சி ஒருநாள் போட்டியொன்றில் நேற்று (30) விளையாடிய நிலையில், இன்று (01) பயிற்சி T20 போட்டி இடம்பெற்றது. 

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் தொடங்கிய இந்த பயிற்சி T20 போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான பதினொருவர் அணியும், தனன்ஞய டி சில்வா தலைமையிலான பதினொருவர் அணியும் மோதின. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குசல் மெண்டிஸ் தரப்பு முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய அவர்கள் 20 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்கள் குவித்தனர். 

மெண்டிஸ் தரப்பிலான துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால், திசர பெரேரா ஆகியோர் நேற்று பயிற்சி ஒருநாள் பெற்ற சதங்களை அடுத்து இன்று அரைச்சதங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். இதில் சந்திமால் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்லாக வெறும் 32 பந்துகளுக்கு 63 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, திசர பெரேராவும் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், அவிஷ்க பெர்னாந்து 42 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், தனன்ஞய டி சில்வா அணி சார்பிலான பந்துவீச்சில் நுவன் பிரதீப், இசுரு உதான மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவரின் யாழ் விஜயத்தில் என்ன நடந்தது?

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 190 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பாடிய தனன்ஞய டி சில்வா தலைமையிலான அணி, குறித்த வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுடன் அடைந்தது. 

தனன்ஞய டி சில்வா அணி சார்பிலான துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தசகலதுறை வீரர் தசுன் ஷானக்க, அதிரடியான முறையில் துடுப்பாடி வெறும் 33 பந்துகளுக்கு 77 ஓட்டங்களைப் பெற்றிருக்க, தனன்ஞய டி சில்வாவும் 42 ஓட்டங்களுடன் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார். 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

இதேநேரம், குசல் மெண்டிஸ் தரப்பு சார்பிலான பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால் மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து சிறப்பாக செயற்பட்டிருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

பயிற்சி T20 போட்டி ஒரு பக்கமிருக்க, நாளையுடன் (02) கண்டி நகரில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் வதிவிடப் பயிற்சிகள் நிறைவுக்கு வருகின்றன. 

போட்டியின் சுருக்கம்

குசல் மெண்டிஸ் அணி – 189/4 (20) தினேஷ் சந்திமால் 63*, திசர பெரேரா 50*, டில்ருவான் பெரேரா 24/1, நுவான் பிரதீப் 40/1, இசுரு உதான 1/48

தனன்ஞய டி சில்வா அணி – 191/6 (19.2) தசுன் ஷானக்க 77(33), தனன்ஞய டி சில்வா 42, லக்ஷான் சந்தகன் 2/27, சுரங்க லக்மால் 2/32, கசுன் ராஜித 2/37

முடிவு – தனன்ஞய டி சில்வா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…