பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட்

169
International Football

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் பார்சிலோனா

தமது சம்பிரதாய போட்டி அணியான பார்சிலோனாவுக்கு எதிரான எல் கிளாசிக்கோ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகா தொடரில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.   

பரபரப்பாக நடந்த முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறத் தவறின. மெஸ்ஸி மற்றும் ஆர்தர் மெலோ மூலம் பார்சிலோனா கோல்பெறும் முயற்சியை தீவிரப்படுத்தியபோதும் ரியல் கோல்காப்பாளர் திபோட் கோர்டொயிஸ் அந்த முயற்சிகளை தடுத்தார்.  

ரியல் மெட்ரிட் சார்பில் வினிசியஸ் ஜுனியர் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து அதன் கோல் பகுதியை அடிக்கடி ஆக்கிரமித்தார். 

எனினும் தனது சொந்த மைதானமான சன்டியாகோ பெர்னபியுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது பாதியில் ரியல் மெட்ரிட் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. இஸ்கோ வேகமாக உதைத்த பந்தை டெர் ஸ்டஜன் பாய்ந்து அபாரமாக தடுத்தார். 

எனினும் பிரேசில் பதின்ம வயது வீரரான வினிசியஸ் 71 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் சார்பில் முதல் கோலை பெற்றார். டொனி க்ரூஸ் வழங்கிய பந்தை இடது பக்க மூலையால் கோல் கம்பத்திற்கு நெருக்கமாக எடுத்துச் சென்று அவர் கோலாக மாற்றினார். இந்நிலையில் மேலதிக நேரத்தில் வைத்து பதில் வீரர் மரியானோ ரியல் மெட்ரிட் சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார்.    

இந்த வெற்றியுடன் ரியல் மெட்ரிட் லா லிகாவில் 26 போட்டிகளில் 56 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் இருந்த பார்சிலோனா ஒரு புள்ளி பின்தங்கி 55 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. 

ரியல் மெட்ரில் கடந்த ஐந்து அனைத்துவகை போட்டிகளிலும் மூன்றில் தோல்வி அடைந்திருந்த நிலையிலேயே முக்கியமான இந்தப் போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. 

இதன்மூலம் லா லிகா சம்பியன்சிப் போட்டியில் ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான கடும் போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. 


மான்செஸ்டர் யுனைடட் எதிர் எவர்டன்

எவர்டன் அணிக்கு எதிரான டேவிட் டி கியின் மோசமான தவறால் பின்னடைவை சந்தித்த மான்செஸ்டர் யுனைடட் ப்ரூனோ பெர்னாண்டஸின் கோல் மூலம் போட்டியை சமநிலை செய்தது. 

இதன்போது எவர்டன் கோல்காப்பாளர் ஜோர்மன் பிக்போர்டின் தவறே பொர்னாண்டஸ் கோல் பெற உதவிய நிலையில் ப்ரீமியர் லீக்கில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சி அணியை மேலும் நெருங்கும் வாய்ப்பை மான்செஸ்டர் யுனைடட் தவறவிட்டது. 

செல்சியை விடவும் மூன்று புள்ளிகள் பின்தங்கி மான்செஸ்டர் யுனைடட் நான்காவது இடத்தில் உள்ளது.   

எனினும் எவர்டன் சார்பில் பிந்திய நேரத்தில் கல்வேர்ட் லிவின் கோல் பெற்றபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. 

போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடட் கோல்காப்பாளர் டி கி பந்தை அதிகநேரம் வைத்திருந்து அதனை மைதானத்தை நோக்கி உதைத்தபோதும் முன்னால் வந்து இடைமறித்த கல்வேர்ட் லுவிஸ் அதனை வலைக்குள் செலுத்தினார்.  

தாம் பெரும் தவறு இழைத்தபோதும் சில நிமிடங்கள் கழித்து ரிசார்லிசனின் கோல் முயற்சியை அவர் அபாரமாக தடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 31 ஆவது நிமிடத்தில் பெர்னாண்டோவின் உதையை தவறாகக் கணித்த எவர்டன் கோல்காப்பாளர் பிக்போர்ட் அந்த பந்து வலைக்குள் செல்ல விட்டுவிட்டார். 

எனினும் போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போதும் எவர்டன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை கில்பி உதைத்தபோது அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.  

போட்டியின் ஒரு நிமிடம் எஞ்சியிருக்கும்போது பெர்னாண்டஸ் மற்றும் ஒடியோன் இகாலோவின் கோல் முயற்சிகளை பிக்போர்ட் அபாரமாக தடுத்தார்.  

இதனிடையே போட்டிக்குப் பின்னர் போட்டி அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட எவர்டன் முகாமையாளர் கார்லோ அன்சலோட்டி மீது சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.  


டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ்

ராவுல் ஜிமினஸின் பிந்திய நேர கோல் மூலம் டொட்டன்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய வொல்வஸ் அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

டொட்டன்ஹாமை விடவும் இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்ற வொல்வஸ் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறுவதற்கு தேவையாக ப்ரீமியர் லீக்கில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் மூன்று புள்ளிகளே பின்தங்கியுள்ளது. 

போட்டியின் 13 ஆவது நிமிடத்தில் டொட்டன்ஹாம் வீரர் ஸ்டீவன் பெர்க்விஜ் பெற்ற கோலுக்கு 27 ஆவது நிமிடத்தில் மட் டொஹார்டி பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து செர்ஜ் அரைரோவின் கோல் மூலம் டொட்டன்ஹாம் முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றது.   

இந்நிலையில் இரண்டாவது பாதியில் வொல்வஸ் கை ஓங்கியது. 57 ஆவது நிமிடத்தில் ஜோடாவின் கோல் மூலம் போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்த அந்த அணி 73 ஆவது நிமிடத்தில் வைத்து ஜிமினஸ் மூலம் வெற்றி கோலை பெற்றது.