ப்ரீமியர் லீக் பட்டத்தை நெருங்கும் லிவர்பூல்: அட்லடிகோவை வீழ்த்தியது மெட்ரிட்

161
International Football roundup

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (01) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் சௌதம்டன்

இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்த லிவர்பூல் அணி சௌதம்டன் அணிக்கு எதிராக 4-0 என வெற்றியீட்டி ப்ரீமியர் லீக்கில் எட்டக் கடினமான 22 புள்ளிகள் இடைவெளியுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

>> வெற்றிப் பயணத்தை தொடரும் லிவர்பூல்

கடந்த பருவம் தொடக்கம் லிவர்பூல் அணி தனது சொந்த மைதானமான அன்பீல்டில் தொடர்ச்சியாகப் பெறும் 20 ஆவது வெற்றி இதுவாகும். இது 2011 மார்ச் தொடக்கம் 2012 மார்ச் வரையான காலத்தில் மன்செஸ்டர்் சிட்டி நிகழ்த்திய சாதனையை சமன் செய்வதாக இருந்தது.  

இந்த வெற்றியின் மூலம் லவர்பூல் இதுவரை ஆடிய 25 போட்டிகளில் 73 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி 1990க்குப் பின் முதல் முறை ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கு ஏஞ்சிய 13 போட்டிகளில் இன்னும் 21 புள்ளிகளை பெற்றால் உறுதியாகிவிடும்

மறுபுறம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

உபாதை காரணமாக சாடியோ மானே இல்லாத நிலையில் லிவர்பூல் அணி முதல் பாதியில் கோல் பெறுவதில் தடுமாற்றம் கண்டது. டன்னி இன்ங்ஸின் இரண்டு கோல் முயற்சிகளை லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் தடுத்ததோடு மறுமுனையில் லிவர்பூலின் இரண்டு கோல் வாய்ப்புகளை சௌதம்டனின் அலெக்ஸ் மகார்தி அபாரமான தடுத்தார்

>> புளு ஈகல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய சோண்டர்ஸ்

எனினும், இரண்டாவது பாதியில் கோல்கள் இடைவிடாது விழுந்தன. 47 ஆவது நிமிடத்தில் ஒக்ஸ்லாடே சம்பர்லைன் லிவர்பூல் சார்பில் முதல் கோலை பெற போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது ஜோர்டன் அன்டர்சன் கோல் எண்ணிக்கையை இரண்டாக்கினார்.   

கடைசி நேரத்தில் மொஹமட் சலாஹ் இலகுவாக இரண்டு கோல்களை பெற்றார். 72 ஆவது நிமிடத்தில் எந்த நெருக்கடியும் இன்றி பந்தை வலைக்குள் செலுத்திய சலாஹ் பின்னர் ரொபார்டோ பெர்மினோ போட்டியில் மூன்றாவது கோல் உதவியை பெற்றுக்கொடுக்க சலாஹ் அதனை கோலாக மாற்றினார்

ரியல் மெட்ரிட் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

கரிம் பென்சமா பெற்ற ஒரே ஒரு கோல் மூலம் தனது கடும் போட்டியாளரான அட்லடிகோ மெட்ரிட்டை வீழ்த்திய ரியல் மெட்ரிட் லா லிகாவில் முதலிடத்தில் நிலைபெற்றது.

கடந்த சில வாரங்களாக ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கு இடையே முதலிடத்திற்கு கடும் போட்டி நீடித்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் 6 புள்ளிகள் இடைவெளியுடன் ரியல் மெட்ரிட் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் 56 ஆவது நிமிடத்தில் பெர்லான்ட் மென்டி ஆறு யார்ட் தூரத்தில் இருந்து பந்தை பிரான்ஸ் முன்கள வீரரான கரிம் பென்சமாவிடம் கொடுக்க அவர் அதனை வலைக்குள் செலுத்தினார்

>> ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு முன்னேற்றம்: ஜுவன்டஸ் அதிர்ச்சித் தோல்வி

பதில் வீரர் வினிசியஸ் ஜூனியர் மூலம் ரியல் மெட்ரிட் மேலும் இரண்டு கோல்களை பெறும் வாய்ப்பை நெருங்கியபோதும் எதிரணி கோல் காப்பாளர் ஜான் ஒப்லக் அவைகளை தடுத்தார்.

உடல் தகுதி இன்மையால் கரெத் பேல் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

எனினும் இந்த வெற்றியானது அட்லடிகோ மெட்ரிட்டுக்கு எதிராக ரியல் மெட்ரிட் 2012க்கு பின்னர் சொந்த மைதானத்தில் பெறும் முதல் லீக் வெற்றியாகும்.   

செல்சி எதிர் லெஸ்டர் சிட்டி

கிங்ஸ் பவர் அரங்கில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் செல்சி மற்றும் லெஸ்டர் சிட்டி அணிகள் மாறி மாறி கோல் திருப்ப ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது

இந்த முடிவினால் லெஸ்டர் சிட்டி ப்ரீமியர் லீக்கில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிப்பதோடு எட்டுப் புள்ளிகள் பின்தங்கி செல்சி நான்காவது இடத்தில் உள்ளது

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை நெருங்காத நிலையில் அன்டோனியோ ருடிகர் 46 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் செல்சி முன்னிலை பெற்றது. எட்டு நிமிடங்களின் பின் பிரன்டன் ரொஜர்ஸ் பதில் கோல் திருப்பினார்

>> தினேஷின் அபாரத் தடுப்பினால் புளு ஸ்டாரை வீழ்த்தி பொலிஸ் இறுதிப் போட்டியில்

இந்நிலையில் யூரி டிலமன் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றி பென் சில்வெல் லெஸ்டர் சிட்டியை முன்னிலை பெறச் செய்தார். இதன்போது மீண்டும் செயற்பட்ட ருடிகர் உயர வந்த பந்தை தாவி தலையால் முட்டி செல்சி அணிக்காக மற்றொரு கோலை பெற போட்டி சமநிலையானது.    

மன்செஸ்டர் யுனைடட் எதிர் வொல்வஸ்

மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 47 மில்லியன் பொண்ட்களுக்கு ஒப்பந்தமான ப்ருனோ பெர்னாண்டஸ் தனது முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய நிலையில் வொல்வஸ் அணிக்கு எதிரான போட்டி கோலின்றி சமநிலை பெற்றது

போர்த்துக்கல் மத்தியகள வீரரான பெர்னாண்டஸ் போட்டியில் சில வாய்ப்புகளை பெற்றபோதும் அவைகளை அவரால் கோலாக மாற்ற முடியாமல்போனது. மந்தமாக நீடித்த இந்தப் போட்டியின் கடைசி நிமிடத்திலேயே கோல் ஒன்று நெருங்கி வந்தது. மன்செஸ்டர் யுனைடட் சார்பில் பிசக்கா வழங்கிய பந்தை டியோகோ டலோட் தலையால் முட்டியபோது பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது

மன்செஸ்டர் யுனைடட் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி இன்றி நீடித்து வருவதோடு அந்த அணி கடைசியாக கடந்த மாத அரம்பத்தில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விஸ் அணியையே தோற்கடித்தது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<