சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அடுத்த சுற்றில்; லிவர்பூலுக்கு நெருக்கடி

289

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (28) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

லிவர்பூல் எதிர் நெபோலி

நெபோலி அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் E குழுவுக்கான போட்டியை 1-1 என சமநிலை செய்த நடப்புச் சம்பியன் லிவர்பூல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு புள்ளி தேவைப்படும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. 

லிவர்பூல் தனது கடைசி குழுநிலை போட்டியான ரெட் புல்ஸ் சல்ஸ்பர்க் அணிக்கு எதிரான ஆடத்தில் அந்தப் புள்ளியை பெறுவது கட்டாயமாகும்.    

மட்ரிடின் வெற்றியை பரித்த PSG: Champions League அடுத்த சுற்றில் டொட்டன்ஹாம், சிட்டி

இரண்டு வார இடைவெளிக்குப் பின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலை போட்டிகள் இலங்கை …………

இந்தப் போட்டியை நேர்த்தியான ஆட்டத்துடன் ஆரம்பித்த இத்தாலியில் நெபோலி அணி முதல் பாதியில் கோல் பெற்று முன்னிலை அடைந்தது. ட்ரிஸ் மார்டினஸ் 21 ஆவது நிமிடத்தில் அந்த கோலை புகுத்தினார். மறுபுறம் ஏமாற்றத்துடன் போட்டியை ஆரம்பித்த லிவர்பூல் அணியின் பிரேசில் மத்தியகள வீரர் பபின்கோ உபாதை காரணமாக 19 ஆவது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் டெஜாரன் லொவ்ரன் 65 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் லிவர்பூல் போட்டியை சமநிலை செய்தபோதும் 16 அணிகள் சுற்றுக்கு முன்னெற காத்திருக்க வேண்டி உள்ளது. 

பார்சிலோனா எதிர் பொருசியா டோர்ட்முண்ட்

பார்சிலோனா அணிக்காக தனது 700 ஆவது போட்டியில் மெஸ்ஸி கோலை புகுத்த டொர்ட்முண்ட் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்சிலோன அணி சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.    

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தற்போது 114 கோல்களை பெற்றிருக்கு மெஸ்ஸி இந்தப் போட்டி முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவரின் அபார பரிமாற்றத்தின் மூலம் லுவிஸ் சுவாரஸ் 29 ஆவது நிமிடத்தில் கோல் பெற்று பார்சிலோனாவை முன்னிலை பெறச் செய்ததோடு நான்கு நிமிடங்களில் எட்டு யார்ட் தூரத்தில் இருந்து தனது இடது காலால் உதைத்து மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக தனது 613 ஆவது கோலை பெற்றார். 

அன்டோனியோ கரீஸ்மன் இரண்டாவது பதியில் பெற்ற கோல் மூலம் பார்சிலோனா இலகுவான வெற்றியை உறுதி செய்ததோடு டோர்ட்முண்ட் கோல் ஒன்றை பெற்றபோதும் அது ஆறுதல் கோலாகவே இருந்தது.

லிலே எதிர் அஜக்ஸ் அம்ஸ்டர்டாம்

ஹகிம் சியெச் பெற்ற கோல் மற்றும் கோல் உதவி மூலம் லிலே அணிக்கு எதிரான H குழு போட்டியில் அஜக்ஸ் 2-0 என வெற்றியீட்டியது. 

போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே சியேச் மின்னல் வேகத்தில் உதைத்து கோல் ஒன்றை பெற்றதோடு 59 ஆவது நிமிடத்தில் குவின்சி பிரோம்ஸ் கோல் பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.   

கடந்த பருவத்தில் அரையிறுதி வரை முன்னேறிய அஜக்ஸ் தனது குழுவில் ஐந்து போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றிருப்பதோடு வெறுமனே ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் லிலே தொடரில் இருந்து வெளியேறியது. 

அஜக்ஸ் தனது கடைசி குழுநிலை போட்டியில் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வெலன்சியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற அந்த அணி இந்தப் போட்டியை, குறைந்த பட்சம் சமநிலை செய்வது அவசியமாகும். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<