ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தை நெருங்கும் மன்செஸ்டர் சிட்டி

142
Getty Images

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் இன்று (26) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

மன்செஸ்டர் சிட்டி எதிர் ஆஷ்டன் வில்லா

ஆஷ்டன் வில்லாவுக்கு எதிரான போட்டியின் இரண்டாவது பாதியில் 3 கோல்களை பெற்று வெற்றியீட்டிய மன்செஸ்டர் சிட்டி கழகம் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை விடவும் மூன்று புள்ளிகளால் மாத்திரமே மன்செஸ்டர் சிட்டி பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. 

எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் மன்செஸ்டர் சிட்டி முதல் பாதியில் தடுமாற்றம் கண்டதோடு ஆஷ்டன் வில்லா கோல் முயற்சிகளிலும் ஈடுபட்டதை காணமுடிந்தது. 

ரியல் மெட்ரிட் தீர்க்கமான வெற்றி: இங்கிலாந்து கழகங்களுக்கு இலகு வெற்றி

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலை போட்டிகள் சில இலங்கை நேரம்படி…

எனினும் முதல் பாதி இடைவேளைக்கு பின் வெறும் 20 நிமிடங்களில் காப்ரியல் ஜேசுஸ் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரஹீம் ஸ்டேர்லிங் கோல் புகுத்தி மன்செஸ்டர் சிட்டியை முன்னிலை பெறச் செய்தார். இந்தப் பருவத்தில் ஸ்டேர்லிங்கின் 13 ஆவது கோலாக இது இருந்தது. 

இந்நிலையில் 65 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி தனது இரண்டாவது கோலை பெற்றபோதும் அந்த கோலை யார் பெற்றார் என்ற குழுப்பம் ஏற்பட்டது. எனினும் தொலைக்காட்சி நடுவர் உதவி மூலம் அது டேவிட் சில்வாவின் கோல் என உறுதியானது. 

ஐந்து நிமிடங்கள் கழித்து இல்காய் குன்டோகன் (İlkay Gündoğan) பெற்ற கோலின் மூலம் மன்செஸ்டர் சிட்டி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.  

எனினும் பெர்னான்டின்ஹோ 87 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் மன்செஸ்டர் சிட்டி கடைசி ஒரு சில நிமிடங்களை 10 வீரர்களுடன் விளையாடியது. 

ஜுவன்டஸ் எதிர் லெக்கே

கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி களமிறங்கிய ஜுவன்டஸ், லெக்கே அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமநிலையில் முடித்ததால் சிரீ-A தொடரில் புள்ளிகளை இழந்தது.

நடப்புச் சம்பியனான ஜுவன்டஸ் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொண்டு கோல் புகுத்தி முன்னிலை பெற்றது. போல் டிபாலா அந்த கோலை பெற்றார். ஆனால் லெக்கேவுக்கு கிடைத்த ஸ்பொட் கிக்கை அதன் தலைவர் மார்கோ மன்கோசு கோலாக மாற்றி ஆட்டத்தை சமநிலை செய்தார்.     

ஜுவன்டஸ் கழகம் இந்த லீக்கில் தோல்வியுறாத அணியாக நீடித்தபோதும் ரொனால்டோவுக்கு ஓய்வு அளித்த நிலையில் தனது வெற்றியை தொடர முடியாமல்போனது.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…