அன்பீல்டில் நடைபெற்ற செபீல்ட் யுனைடட் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியில் 2-0 எனவெற்றியீட்டிய லிவர்பூல் அணி எந்த தோல்வியும் இன்றி முழுமையான ஓர் ஆண்டை (365 நாட்கள்) பூர்த்தி செய்தது.
லிவர்பூல் அணி கடைசியாக நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக 2019 ஜனவரி 3ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 2-1 என தோல்வியை சந்தித்திருந்தது. அது தொடக்கம் அந்த அணி தோல்வி இன்றி 37 போட்டிகளில் ஆடியுள்ளது.
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிவர்பூல் புத்தாண்டில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 20 போட்டிகளில் ஆடி 58 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் லெஸ்டரை விடவும் 13 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
செபீல்ட் யுனைடட் அணியுடனான போட்டியை அதிரடியாக ஆரம்பித்த லிவர்பூல் 4 ஆவது நிமிடத்திலேயே கோல் பெற்றது. ஜோர்ஜ் பால்டொக் தடுமாற்றம் காண அன்டி ரொபட்சன் பரிமாற்றிய பந்தைக் கொண்டு மொஹமட் சலாஹ் இலகுவாக கோல் பெற்றார். லிவர்பூல் அணி இந்த பருவத்தில் பெற்ற வேகமான கோலாகவும் இது இருந்தது.
இந்நிலையில் செபீல்ட் யுனைடட் பதில் கோல் திருப்ப முயன்றாலும் முதல் பாதி லிவர்பூலுக்கு சாதகமாகவே முடிந்தது.
முதல் பாதி: லிவர்பூல் 1 – 0 செபீல்ட் யுனைடட்
இரண்டாவது பாதியிலும் லிவர்பூலின் கை ஓங்கி இருந்தது. சலாஹ் மற்றொரு கோலை திருப்பும் முயற்சி பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் தவறிப்போனது.
புத்தாண்டில் வெற்றியை சுவைத்த ஆர்சனல், சிட்டி அணிகள்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் புத்தாண்டின் முதல் ………..
இந்நிலையில் 64ஆவது நிமிடத்தில் எதிரணி பாதுகாப்பு அரணை முறியடித்து பெனால்டி பெட்டி பகுதிக்குள் பந்தை எடுத்துச் சென்ற சாடியோ மானே வலையை நோக்கி பந்தை உதைத்தபோதும் அதனை செபீல்ட் கோல்காப்பளர் தடுத்த நிலையில் மீண்டும் அந்தப் பந்தை நோக்கிச் சென்று அதனை கோலாக மாற்றினார்.
இந்த கோலானது லிவர்பூல் அணிக்காக சாடியோ மானே தொடர்புபட்டு பெறப்படும் 100 ஆவது கோலாகும் (74 கோல், 26 கோல் உதவிகள்). லிவர்பூல் அணிக்காக அவர் 151 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு நேரம் – லிவர்பூல் 2 – 0 செபீல்ட் யுனைடட்
கோல் பெற்றவர்கள்
லிவர்பூல் – மொஹமட் சலாஹ் 4’, சாடியோ மானே 64’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<