இங்லிஷ் பிரீமியர் லீக்
பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற மன்செஸ்டர் சிட்டி மற்றும் போர்ன்மௌத் அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் சிட்டி வெற்றியீட்டியது.
இதன்படி, கிடைக்கப் பெற்ற 8 புள்ளிகளின் மூலம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செல்சி அணிக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தை மன்செஸ்டர் சிட்டி அணி தக்க வைத்துள்ளது.
மன்செஸ்டர் சிட்டியின் முன்கள வீரர் கப்ரியல் ஜீசஸ்சின் காயம் காரணமாக அவருக்கு பதிலாக புது வரவாக செர்ஜியோ ஆகாரோ போட்டியில் களமிறங்கியிருந்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 29ஆவது நிமிடம் தமது தரப்பினரால் உள்ளனுப்பப்பட்ட பந்தை ரஹீம் ஸ்டேலிங் கோலாக்கி முதல் பாதியிலேயே சிட்டி அணியை முன்னிலைப்படுத்தினார்.
எனினும், போட்டியின் 51ஆவது நிமிடம் போர்ன்மௌத் அணிக்கு கிடைக்கப் பெற்ற இலகு வாய்ப்பொன்று கைநழுவியது. அதனையடுத்து இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன.
இந்நிலையில், 69ஆவது நிமிடம் ஸ்டேலிங் உள்செலுத்திய பந்தை தடுக்க முயன்ற போர்ன்மௌத் அணியின் பின்கள வீரர் டிரொன் மிங்சின் காலில் பட்ட பந்து தவறுதலாக கோலுக்குள் செல்ல, அது ஒவ்ன் கோலாக மாறியது.
அந்த வகையில் போட்டி முழு நேர நிறைவின் போது மன்செஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல்கள் கணக்கில் போர்ன்மௌத் கழக அணியை வெற்றி கொண்டது.
ஐரோப்பிய லீக்
அதேநேரம், ஐரோப்பிய லீக் போட்டிகளான A சிரிஸ் போட்டிகளுக்காக லசியோ மற்றும் மிலான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில் லசியோ அணி போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய போதிலும், இறுதி நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமப்படுத்தியது மிலான் அணி.
போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லசியோ கால்பந்து கழகம், தமக்கு கிடைக்கப் பெற்ற பல வைப்புக்களை வீணடித்தது. எனினும் 45ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற பெனால்டியை சரியாக பயன்படுத்திக்கொண்ட லூக்காஸ் பிகிலியா முதல் கோலைப் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்தும் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவ்வணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அவர்கள் அவற்றை சிறந்த முறையில் நிறைவு செய்யவில்லை.
அதனை தொடர்ந்து, போட்டி முடிவற ஒருசில நிமிடங்களே எஞ்சிய நிலையில், மிலான் தரப்புக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்பினை சரியாகப் பயன்படுதிக்கொண்ட ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுசோ, கோல் ஒன்றை அடித்து போட்டியை சமப்படுத்தியதோடு தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.