2025ஆம் ஆண்டு மலர்ந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எம்மிடம் இருந்து விடைபெற்றிருக்கும் 2024ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு எவ்வாறு அமைந்தது என்பதனை இந்த கட்டுரை வாயிலாகப் பார்வையிடுவோம்.
டெஸ்ட் கிரிக்கெட்
கிரிக்கெட்டின் மிக நீண்ட வடிமான டெஸ்ட் கிரிக்கெட் பல சுவாரசியமான போட்டிகளை 2024ஆம் ஆண்டில் கொடுத்திருந்தது. குறிப்பாக இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2024ம் ஆண்டு எப்படி? ; ஒரு மீள்பார்வை!
கடந்த ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 150 வருட பராம்பரியத்தினைக் கொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக கடந்த ஆண்டு மாறியிருந்தது.
இங்கிலாந்து 09 வெற்றிகளுடன் கடந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக மாறியதோடு, அந்த அணி கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 823 ஓட்டங்கள் பெற்று, 2024இல் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணியாகவும் சாதனை செய்தது.
இங்கிலாந்தினை அடுத்து 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக இந்தியாக 8 வெற்றிகளுடன் மாறியதுடன் நியூசிலாந்து, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 6 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன. இதில் தென்னாபிரிக்கா கடந்த ஆண்டு வெற்றிகள் மூலம் அடுத்த பருவத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாகவும் மாறியது.
மறுமுனையில் பங்களாதேஷ் அணி 2024ஆம் ஆண்டிற்கு சிறந்த தருணமாக மாறியது. பங்களாதேஷ் வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பெற்றுக் கொண்டனர்.
எனினும் 2024ஆம் ஆண்டு, டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. அவ்வணிகளினால் கடந்த ஆண்டில் எந்த டெஸ்ட் வெற்றிகளையும் பதிவு செய்ய முடியாது போயிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மறுமுனையில் 2024இல் இந்திய, இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைவான இன்னிங்ஸ் ஓட்டங்களையும் பதிவு செய்திருந்தன. இதில் இலங்கை தென்னாபிரிக்காவுடன் 42 ஓட்டங்களினையும், இந்தியா நியூசிலாந்துடன் 46 ஓட்டங்களினையும், தென்னாபிரிக்கா இந்தியாவுடன் 55 ஓட்டங்களையும் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் வீரர்களின் சாதனைகளை நோக்கும் இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவரான ஜஸ்பிரிட் பும்ரா 71 விக்கெட்டுக்களுடன் கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக மாறினார். டெஸ்ட் போட்டிகளில் 2024ஆம் ஆண்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக 1556 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான ஜோ ரூட் மாறியதோடு, (1000 ஓட்டங்களுக்கு மேல் பெற்று) அதிக துடுப்பாட்ட சராசரியினை (74.92) வெளிப்படுத்திய வீரராக இலங்கையின் இளம் நட்சத்திரமான கமிந்து மெண்டிஸ் காணப்படுகின்றார்.
ஒருநாள் கிரிக்கெட்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை 2024ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்தது என்றே கூற முடியும். இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு குறிப்பாக 2024ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. இலங்கை 12 வெற்றிகளுடன் 2024இல் அதிக ஒருநாள் வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக மாறியது. மறுமுனையில் இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் ஒன்றினையும் சுமார் 27 வருட இடைவெளியின் பின்னர் கைப்பற்றியிருந்தது.
பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரை அவர்கள் பலமிக்க தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றியிருந்தது. ஒருநாள் போட்டிகளின் தனிப்பட்ட வீரர்கள் தரவுகளை நோக்கும் போது துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர்.
2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில் நடந்தவை!
2024ஆம் ஆண்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரராக இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் 742 ஓட்டங்களுடன் மாறியிருந்ததோடு, அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இலங்கை அணி வீரரான வனிந்து ஹஸரங்க 26 ஓட்டங்களுடன் மாறினார். இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க கடந்த ஆண்டில் இரட்டைச் சதம் (210) எட்டிய ஒரே வீரராக மாறியதோடு, இலங்கை அணியே கடந்த ஆண்டில் ஒரு இன்னிங்ஸில் கூடுதல் ஓட்டங்கள் (381) பெற்ற அணியாகவும் மாறியது.
மறுமுனையில் துரதிஷ்டவசமாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளினால் 2024ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகள் எதனையும் பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியிருந்தது.
T20i போட்டிகள்
2024ஆம் ஆண்டு T20i கிரிக்கெட்டுக்கு மிக முக்கிய ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற T20i உலகக் கிண்ணத் தொடரினை இந்தியா வென்றதோடு, இந்தியா சுமார் 13 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணம் ஒன்றினையும் வென்றது.
T20i உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதோடு, டெஸ்ட் அந்தஸ்து காணப்படும் பங்களாதேஷ் அணியுடனான T20i தொடரினையும் கைப்பற்றினர். அத்துடன் ஐ.சி.சி. இன் அங்கத்துவ அணிகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆண்டு விளையாடிய 26 போட்டிகளில் 20 வெற்றிகளை பதிவு செய்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
தனிநபர் பதிவுகளை நோக்கும் போது ஐ.சி.சி. இன் அங்கத்துவ அணி வீரர்களின் ஆதிக்கம் காணப்படுகின்றது. இதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் எஹ்சான் கான் 2024ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுக்களை (46) கைப்பற்றிய வீரராகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றுமொரு வீரரான முஹமட் வஸீம் அதிக ஓட்டங்கள் (909) எடுத்த வீரராக காணப்படுகின்றனர்.
டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளில் அதிக விக்கெட்டுக்களை (38) கடந்த ஆண்டு கைப்பற்றிய பந்துவீச்சாளராக வனிந்து ஹஸரங்க காணப்படுவதோடு, அதிக ஓட்டங்கள் (738) குவித்த துடுப்பாட்ட வீரராக பாகிஸ்தானின் பாபர் அசாம் உள்ளார்.
மகளிர் கிரிக்கெட்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த ஆண்டு இலங்கை அதிகூடிய வெற்றி இலக்கு (302) ஒன்றினை தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் விரட்டி புதிய உலக சாதனை செய்ததோடு, நியூசிலாந்து தங்களது கன்னி உலகக் கிண்ணத் தொடரினை கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவினை வீழ்த்திப் பெற்றுக் கொண்டது.
மறுமுனையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரினை வென்றிருந்ததும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<