சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த 2021

International Cricket Review 2021

424

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை, 2020ம் ஆண்டு கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமான போட்டிகள் பாதிக்கப்பட்டிருந்த போதும், இந்த ஆண்டு T20 உலகக்கிண்ணம் உட்பட பல்வேறு போட்டித்தொடர்கள் நடைபெற்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்திருந்தது.

குறிப்பாக, இந்த ஆண்டினை பொருத்தவரை மைதானத்துக்கு ரசிகர்கள் உள்வாங்கப்பட்டிருந்ததுடன், சர்வதேசத்தில் நடைபெறும் அனைத்து லீக் போட்டிகளையும் நடத்துவதற்கான வாய்ப்புகளும் கிடைத்திருந்தன. அந்தவகையில், இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெற்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் பார்வையிடலாம்.

இலங்கை கிரிக்கெட்டிற்கு 2021ஆம் ஆண்டு எப்படி??

ஜனவரி

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கன்னி ஒருநாள் போட்டியில் சதமடித்த குர்பாஸ்

அயர்லாந்து அணிக்கு எதிரான தன்னுடைய கன்னி ஒருநாள் போட்டியில், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் சதம் விளாசியதுடன், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியையும் பதிவுசெய்தது.

பெப்ரவரி

பெப் டு பிளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர் பெப் டு பிளெசிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

கெயல் மேயரின் இரட்டைச்சதம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மே.தீவுகளின் கெயல் மேயர்ஸ், தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் (210*) கடந்து சாதித்ததுடன், தோல்வியிலிருந்து அணியை மீட்டு போட்டியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.

இரண்டாவது தடவையாக கிண்ணம் வென்ற நொர்தென் வொரியர்ஸ்

அபு தாபி T10 தொடரில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான நொர்தென் வொரியர்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது T10 கிண்ணத்தை சுவீகரித்தது.

பிக் பேஷ் கிண்ணத்தை வென்ற சிட்னி சிக்ஸர்ஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் லீக்கின் இறுதிப்போட்டியில் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணியை வீழ்த்தி, இரண்டாவது தடவையாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி கிண்ணத்தை வென்றது.

மார்ச்

லெஜண்ட்ஸ் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இந்தியா

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றிய வீதி பாதுகாப்பு உலகத்தொடரின் சம்பியன் கிண்ணத்தை, இறுதிப்போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய லெஜண்ட்ஸ் அணி வெற்றிக்கொண்டது.

Road Safety World tour 2021

மே.தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராகிய கிரைக் பிராத்வைட்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ஜேசன் ஹோல்டர் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு பதிலாக கிரைக் பிராத்வைட் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஒத்திவைக்கப்பட்ட PSL தொடர்

கொவிட்-19 தொற்று காரணமாக, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரே போட்டியில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஹெட்ரிக்

இலங்கை – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில், மேற்கிந்திய தீவுகள் தலைவர் கீரன் பொல்லார்ட், அகில தனன்ஜயவின் ஓவருக்கு 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். குறித்த இந்த ஆறு சிக்ஸர்களுக்கு முதல் அகில தனன்ஜய ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மே

ஓய்வை அறிவித்த வெட்லிங்

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பிஜே வெட்லிங், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

IPL ஒத்திவைப்பு

IPL அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பு குழாம் அங்கத்தவர்களுக்கு ஏற்பட்ட கொவிட்-19 தொற்று காரணமாக, IPL தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன்

ஐசிசி டெஸ்ட் சம்பியனாகிய நியூசிலாந்து

இங்கிலாந்தின் ரோஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

ICC

T20 உலகக்கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

இந்தியாவில் நடைபெறவிருந்த ஐசிசி T20 உலகக்கிண்ணத்தொடர் கொவிட்-19 தாக்கம் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்

தி ஹண்ட்ரட் கிண்ணத்தை வென்ற சௌதர்ன் பிரேவ்

இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில், மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய சௌதர்ன் பிரேவ் அணி கிண்ணத்தை வென்றது.

ஆஸி.யை வீழ்த்திய பங்களாதேஷ்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரை வெற்றிக்கொண்ட பங்களாதேஷ் அணி, சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரொன்றை கைப்பற்றி சாதனை படைத்தது.

செப்டம்பர்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற மொயீன் அலி

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

T20I தலைவர் பதவியிலிருந்து விலகிய விராட் கோஹ்லி

T20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து, T20I தலைவர் பதவயிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி அறிவித்தார்.

CPL கிண்ணம் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் வசம்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் கிண்ணத்தை டுவைன் பிராவோ தலைமையிலான சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி முதன்முறையாக வெற்றிக்கொண்டது.

ஓய்வை அறிவித்தார் பிரெண்டன் டெய்லர்

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஒக்டோபர்

IPL கிண்ணத்தை வெற்றிக்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான IPL இறுதிப்போட்டியில், சிறப்பான வெற்றியை பதிவுசெய்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 4வது IPL கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

IPLT20.COM

நவம்பர்

அணித்தலைவராகிய பெட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் பெய்ன் விலகியதை தொடர்ந்து, அந்த அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். குறிப்பாக, அவுஸ்திரேலியா அணியானது, 1956ம் ஆண்டுக்கு பின்னர், வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை டெஸ்ட் அணியின் தலைவராக நியமித்திருந்தமை சிறப்பம்சமாகும்.

ஓய்வுபெற்ற வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான ஏ.பிடி வில்லியர்ஸ் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

T20 உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அவுஸ்திரேலிய அணி சம்பியனாக முடிசூடியது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த டுவைன் பிராவோ

T20 உலகக்கிண்ணத்தில் விளையாடிய மே.தீவுகளின் அனுபவ துடுப்பாட்ட வீரர் டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

டிசம்பர்

ஆஷஷ் கிண்ணம் வென்ற அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஷ் கிண்ணத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

வரலாறு படைத்த அமெரிக்கா

சர்வதேச டெஸ்ட் அந்தஸ்தை கொண்ட அயர்லாந்து அணிக்கு எதிராக, முதல் T20I போட்டியில் விளையாடிய அமெரிக்க அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அணி ஒன்றை முதன்முதலாக வீழ்த்தி வரலாறு படைத்தது.

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள்

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ளே ஆகியோருக்கு அடுத்தப்படியாக இவர், இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருந்தார். அஜாஸ் பட்டேல் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், வெளிநாட்டு மண்ணில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஓய்வை அறிவித்த ரொஸ் டெய்லர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் குயிண்டன் டி கொக்

தென்னாபிரிக்க அணியின் இளம் வீரர் குயிண்டன் டி கொக், தன்னுடைய 29வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க