2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிகள் விபரம்

World Test Championship - 2023

291

2021-23 ICCயின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் வழங்குவதில் புதிய முறையை சர்வதேச கிரிக்கெட் வாரியம்  (ICC) இன்று வெளியிட்டுள்ளது. 

முதலாவது தொடரைப் போலவே இரண்டாவது ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரிலும் 9 அணிகள் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாடும். அதாவது 3 டெஸ்ட் தொடர்களை தங்கள் நாட்டிலும், 3 டெஸ்ட் தொடர்களை வெளிநாட்டிலும் ஆட வேண்டும்.

அத்துடன், புதிய முறைப்படி ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் ஒரே மாதிரியான புள்ளிகள் வழங்கப்படும். 

அதன்படி, அடுத்த தொடரில், அணிகள் ஒவ்வொன்றும் பெற்றுக்கொள்கின்ற புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொள்ளும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

அதாவது, ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் 12 புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு அணி வெற்றிப் பெறும் பட்சத்தில், அந்த அணிக்கு 100 சதவீதம் அதாவது 12 புள்ளிகள் அப்படியே வழங்கப்படும். 

ஒருவேளை, போட்டி டை (சமன்) ஆகும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் 6 புள்ளிகளாக பகிர்ந்து அளிக்கப்படும்.   

அதேசமயம், ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி  டிரா ஆகும் பட்சத்தில், 4 புள்ளிகள் (33.33 சதவீதம்) வழங்கப்படும். போட்டியில் தோற்கும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்படாது.

அதேசமயம், இந்த மொத்த புள்ளிகள் என்பது ஒவ்வொரு தொடருக்கும் வேறுபடும். அதாவது ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து புள்ளிகள் எண்ணிக்கை மாறுபடும். 

அதாவது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மொத்தம் 24 புள்ளிகளும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மொத்தம் 36 புள்ளிகளும், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மொத்தம் 48 புள்ளிகளும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மொத்தம் 60 புள்ளிகள் என்று இவ்வாறு மொத்த புள்ளிகள் தொடருக்கு ஏற்ப மாறுபடும்.

இதுகுறித்து ஐசிசியின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், 

முன்னைய புள்ளிகள் முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்து வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. இந்த புதிய முறை மூலம், எங்களுக்கு எல்லா அணிகளையும் எளிதில் ஒப்பிட்டுப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு தொடரிலும், அவர்கள் எத்தனை போட்டியில் விளையாடியிருந்தாலும் அவர்களது செயல்திறனை எங்களால் அறிய முடியும்என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இரண்டாவது ICCயின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி, ஆறு நாடுகளுக்கிடையில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை இலங்கையிலும், பங்களாதேஷ், இந்தியா, நியூசிலாந்து அணிகளை அந்தந்த நாடுகளிலும் சந்திக்கவுள்ளது.  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…